கோவில்பட்டி புதிய மாவட்டமாக உருவாக்கப்படும்..! தொழிற்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்: அமைச்சர் கடம்பூர் ராஜூ பேட்டி

கோவில்பட்டி: கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் என அமைச்சரும், அத்தொகுதியின் வேட்பாளருமான கடம்பூர் ராஜூ வாக்குறுதி அளித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைச்சர் கடம்பூர் ராஜூ இன்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவில்பட்டியில் மூன்றாவது முறையாக வெற்றி பெற்றால், தொழிற்பூங்கா அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தார்.

மேலும், கோவில்பட்டியை தலைமையிடமாக கொண்டு புதிய மாவட்டம் உருவாக்கப்படும் எனவும் வாக்குறுதி அளித்தார். தொடர்ந்து பேசிய அவர், கோவில்பட்டி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட 3-வது முறையாக எனக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 2011 முதல் 2016 வரை சட்டப்பேரவை உறுப்பினராகவும், 2016 முதல் தற்போது வரை அமைச்சராகவும் தொடர்ந்து 10 ஆண்டுகள் எண்ணற்ற அரசின் சாதனைத் திட்டங்களைத் தொகுதி மக்களுக்குப் பெற்றுத் தந்துள்ளேன்.

மக்களும் என்னுடன் உள்ளனர். நானும் மக்களுடன்தான் இருக்கிறேன். இது ஒன்றே எனக்கு வெற்றி வாய்ப்பை தேடிக் கொள்ளும் சூழ்நிலை உள்ளது. தாமிரபரணி - வைப்பாறு இணைப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல் கேரள மாநிலம் பம்பை - வைப்பாறு இணைப்பதற்குப் பல கட்டப் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதைப் பெற்றுத்தரும்போது கோவில்பட்டி வளம் கொழிக்கும் பூமியாக பெறும் நிலையை உருவாக்கித் தருவேன் என்று கூறினார்.

Related Stories:

>