×

வேலூர் சைதாப்பேட்டையில் சாலையில் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீர்கேடு-உடனடி நடவடிக்கைகளுக்கு கோரிக்கை

வேலூர் : வேலூர் சைதாப்பேட்டையில் குப்பை மேடாகி போன சாலையால் பெரும் அவதிக்குள்ளாகி வருவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.வேலூர் மாநகராட்சி 2வது மண்டலம் சைதாப்பேட்டை மெயின் பஜார் பகுதியில் கானார் மசூதி தெருவுக்கும், அங்குள்ள பழைய நிதியுதவி தொடக்கப்பள்ளி கட்டிடத்துக்கும் இடையில் மிகவும் குறுகலான பகுதியில் சாலையின் ஒரு பகுதியை அடைத்தபடி மாநகராட்சியின் 2 குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளன.

இந்த குப்பை தொட்டிகள் நிரம்பி அந்த சாலையை மறித்தபடி மேலும் பயன்படுத்தப்பட்ட தலையணைகள், மக்காப்பொருட்கள், இறைச்சிக்கழிவுகள் அடைக்கப்பட்ட மூட்டைகள், மருத்துவக்கழிவுகள் அடங்கிய மூட்டைகள் என சாலை முழுவதும் சிதறிக்கிடக்கும் குப்பைக்கழிவுகளால் வாகன ஓட்டிகள் மட்டுமின்றி, பாதசாரிகளும், அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களும், வியாபாரிகளும் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

குறிப்பாக இரவு நேரங்களில் குப்பை மேட்டில் இருந்து வீசும் துர்நாற்றமும், கொசுக்களும் தங்களுக்கு நோய்த்தொற்று அபாயம் மட்டுமின்றி, தூக்கமில்லாமல் தவிக்கும் நிலைக்கு  தள்ளப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

இதுதொடர்பாக அப்பகுதியை சேர்ந்த மக்கள் கூறும்போது, ‘எங்கள் பகுதிக்கு மாநகராட்சி தூய்மை பணியாளர்களே சரியாக வருவதில்லை. வாரத்திற்கு ஒரு நாள் வந்தாலே அதிசயம்தான். வேலூர் பிரதான சாலையான மெயின் பஜார் சாலையில் தனியார் நர்சிங் ஹோம்கள், மளிகை கடைகள், பாத்திரக்கடைகள்,  தள்ளுவண்டி கடைகள், இறைச்சிக்கடைகள் என அனைத்தும் அமைந்துள்ளன. அதோடு தனியார் தங்கும் விடுதிகளும், லாட்ஜ்களும் கூட உள்ளன.

இதனால் இங்கிருந்து வெளியேற்றப்படும் கழிவுகள் இங்குள்ள குப்பைத்தொட்டியில் வீசப்படுகின்றன. முன்பெல்லாம் 2 நாட்களுக்கு ஒருமுறை இங்கு வந்து குப்பையை மாநகராட்சி வண்டிகள் சேகரித்து செல்லும். இப்போது வாகனமே வருவதில்லை. அதோடு தூய்மை பணியாளர்களும் வருவதில்லை’ என்றனர்.எனவே, பொதுமக்களின் வேதனை குரலை அறிந்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Saidapet, Vellore , Vellore: The people of Vellore are suffering due to the rubbish dumped road in Saidapet. Vellore
× RELATED சென்னை இளம் பெண்கொலை வழக்கு கைதான காதலன் பரபரப்பு வாக்குமூலம்