கடலூர் வில்வநகர் பூங்காவில் தேங்கி நிற்கும் மழைநீர் தொற்று நோய் ஏற்படும் அபாயம்

கடலூர் : கடலூர் வில்வநகர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் சுமார் 130க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இங்கு வசிப்பவர்களின் குழந்தைகள் விளையாடுவதற்காகவும், வயதானவர்கள் காலையிலும், மாலையிலும், நடைபயிற்சி மேற் கொள்வதற்கும், நகராட்சி சார்பில் பூங்கா அமைக்கப்பட்டது. இந்த பூங்காவை நகராட்சி நிர்வாகம் சரிவர பராமரிக்காத காரணத்தால் தற்போது பொலிவிழந்து காணப்படுகிறது.

கடந்த மாதம் கடலூரில் பெய்த பலத்த மழை காரணமாக நகராட்சி பூங்காவில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது.

நீரை அகற்ற எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் அதில் கொசுக்கள் உற்பத்தியாகி, துர்நாற்றம் வீசி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி வருகிறது.

இதனால் குழந்தைகளும், பெரியவர்களும் பூங்காவுக்குள் செல்லமுடியாமல் அவதி அடைந்து வருகின்றனர். மேலும் கொசுக்கள் அதிக அளவில் உற்பத்தியாவதால், இங்கு வசிக்கும் மக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

மேலும் பாம்பு போன்ற விஷ ஜந்துக்களும் இருப்பதால் இங்கு செல்லவே பொதுமக்கள் மிகவும் அச்சப்படுகின்றனர்.பூங்காவில் உள்ள உயர்கோபுர மின் விளக்கும் எரியாததால் இரவு நேரங்களில் பூங்கா சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. எனவே, பூங்காவில் தேங்கி நிற்கும் மழை நீரை அகற்றி, முறையாக பராமரிக்க வேண்டும். உயர் கோபுர மின் விளக்கு எரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories:

>