தக்கலை அருகே சென்டர் மீடியன் மீது மோதும் வாகனங்கள்-நெடுஞ்சாலைத்துறை மெத்தனம்

மார்த்தாண்டம் : தக்கலை  காவல் நிலையத்துக்கு உள்பட்டது வெள்ளிகோடு அருகே இரட்டான்விளை பகுதி. இது  ஆபத்தான வளைவு கொண்ட தேசிய நெடுஞ்சாலையாகும். இங்கு அடிக்கடி விபத்துகள்  நடந்து வந்தது. இதனால் பல  போராட்டங்களுக்கு மத்தியில் விபத்தை தடுக்க சிறு  அளவாக சென்டர் மீடியன் அமைக்கப்பட்டது. சுமார் 450 மீட்டர் தூரம் ஆபத்தான  வளைவு பகுதியாகும். ஆகவே முழுவதும் சென்டர் மீடியன் அமைக்க வேண்டும் என்பது  கோரிக்கை.

ஆனால் சில மீட்டர் தூரம் மட்டுமே சென்டர் மீடியன்  அமைக்கப்பட்டது. 450 மீட்டர் தூரத்துக்கு அமைத்து இருந்தால் விபத்துக்கள்  ஏற்படுவது முழுவதுமாக தடுக்கப்பட்டு இருக்கும். தேசிய நெடுஞ்சாலை துறையின்  மெத்தனப் போக்கால்  தினந்தோறும் கேரளாவுக்கு அதிக பாரத்துடன் கனிம வளங்கள் ஏற்றிச்  செல்லும் டாரஸ் லாரிகள் சாலையின் மத்தியில் சிறிதளவு தூரம் மட்டுமே  அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன் காங்கிரிட் கட்டைகள் மீது இடித்து  விபத்தை ஏற்படுத்துவது தொடர்கதையாக உள்ளது.

ஆபத்தான எஸ் வடிவ வளைவு  பகுதி என்பதால், அந்த வளைவு தொடங்கும் இடத்திலிருந்து அது முடியும் பகுதி  வரை சாலை நடுவே சென்டர் மீடியன் அமைக்க நடவடிக்கை எடுக்காமல் தேசிய  நெடுஞ்சாலை துறை அதிகாரிகளின் அலட்சியப்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் அதிக பாரம் ஏற்றி வரும் கனரக வாகனங்கள் தொடர்விபத்துகளுக்கு காரணமாகின்றன.

இப்படி  அதிக பாரம் ஏற்றி செல்லும் கனரக வாகனங்களை காவல்துறை கண்டுகொள்வது  இல்லையாம். பைக்கில் செல்வோர் ஹெல்மெட் அணியவில்லை, காரில் சீட் பெல்ட் அணியவில்லை,  ஆவணங்கள் இல்லை என பரிசோதித்து அபராதம் விதிக்கும் போலீசார் அதிக  பாரம் ஏற்றி செல்லும் கனரக லாரிகளை மட்டும் கண்டும் அதை பாதுகாப்புடன்  வழியனுப்பி வருவது வியப்பு கலந்த அதிர்ச்சியாக உள்ளது என்று குற்றம்  சாட்டுகின்றனர்.

வட்டார போக்குவரத்து அதிகாரிகளும் கண்டுகொள்வது  இல்லையாம். ஆனால் டாரஸ் லாரிகளை தவிர ஏனைய அனைத்து வாகனங்களிலும் சிறிய  மாற்றம் செய்திருந்தால், உடனே அந்த வாகனத்தை பிடித்து வழக்கு போடும் வட்டார  போக்குவரத்துத்துறை கனிமவளம் ஏற்றி வரும் டாரஸ் லாரிகளை மட்டும் கண்டுகொள்ளாதது ஏன்?  என்று வாகன ஓட்டுநர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

தற்போது தேர்தல்  நேரத்தில் பறக்கும் படையினர் பல்வேறு வாகனங்களை சோதனை செய்து வரும்  நேரத்தில் சட்ட விரோத கனிம வள கடத்தல்களையும் தடுக்க  சிறிதளவேனும் சட்டத்தை அனைவருக்கும் சமம் என்ற அளவில் பின்பற்றினால்  பெருமளவு விபத்துகளை தடுப்பதோடு சிதிலம் அடையும் சாலைகளையும்  தடுக்கமுடியும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

Related Stories:

>