×

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயில் ஆழித்தேரோட்டத்தையொட்டி தேரில் குதிரைகள் பொருத்தும் பணி மும்முரம்

திருவாரூர் : திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலின் ஆழித்தேரோட்ட விழாவினையொட்டி தேருக்கு முன்பாக பொருத்தப்படும் குதிரைகள் தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க கோயிலாக இருந்து வரும் தியாகராஜசுவாமி கோயிலானது சைவ சமயத்தின் தலைமை பீடமாகவும், பிறக்க முக்தியளிக்கும் ஸ்தலமாகவும், சமய குறவர்கள் நால்வராலும் பாடல் பெற்ற ஸ்தலமாகவும் தலமாகவும் இருந்து வருகிறது.

மேலும் கோயில் 5 வேலி, குளம் 5 வேலி, ஓடை 5 வேலி என நிலப்பரப்பினை கொண்ட இக்கோயிலின் மூலவராக வன்மீகநாதரும், உற்சவராக தியாகராஜரும் இருந்து வரும் நிலையில் இக்கோயிலின் ஆழித்தேரானது ஆசிய கண்டத்திலேயே மிகப்பெரிய தேர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது. கோயிலின் விழாக்களில் பங்குனி உத்திர விழாவானது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக ஆழித்தேரோட்டமும் அதன் பின்னர் கோயிலின் மேற்கு புறத்தில் உள்ள கமலாலய குளத்தில் தெப்ப திருவிழாவும் நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் கொரோனோ காரணமாக கடந்தாண்டு நடைபெற வேண்டிய தேரோட்டம் மற்றும் தெப்ப திருவிழா நிறுத்தப்பட்டது. இந்நிலையில் தற்போது கொரோனோவின் தாக்கம் குறைந்துள்ளதால் நடப்பாண்டில் இந்த ஆழித்தேரோட்ட விழாவினை நடத்துவதற்கு அறநிலைய துறை சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக கடந்த ஜனவரி 28ம் தேதி பந்தகால் முகூர்த்தம் நடைபெற்ற நிலையில் விழா துவக்கத்திற்காக மஹா துவஜாரோகணம் எனப்படும் கொடியேற்றும் நிகழ்ச்சியானது கடந்த 2ம் தேதி நடைபெற்ற நிலையில் வரும் 25ம் தேதி காலை 7.30 மணியளவில் ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்டமானது நடைபெறுகிறது.

இந்நிலையில் இந்த தேரோட்டத்திற்கு குறைந்த நாட்களே இருப்பதால் ஆழித்தேர் கட்டுமான பணி மற்றும் ஆழித்தேரில் விட்டவாசல் வழியாக தியாகராஜர் எழுந்தருளுவதற்கு பந்தல் அமைக்கும் பணி மற்றும் தேரில் பொருத்தப்படும குதிரைகள் மற்றும் பொம்மைகள் தயாரிக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Tags : Thiruvarur Thiyagaraja Swamy Temple , Thiruvarur: Thiruvarur Thiyagaraja Swamy Temple will be preparing horses to be fitted in front of the chariot for the flood festival.
× RELATED திருவாரூர் தியாகராஜர் சுவாமி...