×

வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்யகோரிய மேலும் 2 வழக்குகள் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றம்!: ஐகோர்ட் கிளை

மதுரை: வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரிய 2 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றத்திற்கு மாற்றி மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. நெல்லையை சேர்ந்த மனோகர் என்பவர் மதுரைக்கிளையில் வழக்கு ஒன்றினை தாக்கல் செய்திருந்தார். அதில் தமிழகத்தில் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பல்வேறு சமூகத்தை சேர்ந்த மக்கள் உள்ளனர். இவர்களுக்கு 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழக அரசு வருகின்ற சட்டமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு பிப்ரவரி 28ம் தேதி வன்னியர் சமூகத்தில் உள்ள 20 சதவீத இட ஒதுக்கீட்டில் 10.5 சதவீத உள் இடஒதுக்கீட்டை வழங்கி சட்டத்தை பிறப்பித்துள்ளது. இது ஏற்கத்தக்கதல்ல.

68 சமூகத்தை கொண்ட சீர்மரபினர்களுக்கு 7 சதவீதமே இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால் அவர்களின் வேலை, கல்வி உள்ளிட்ட விவகாரத்தில் பாதிப்பு ஏற்படும் சூழல் உள்ளது. முறையான சாதி வாரியான கணக்கெடுப்பு நடத்திய பின்னரே, இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் இடஒதுக்கீடு வழங்கும் சட்டத்தை ரத்து செய்யவும் அதன் அடிப்படையில் கல்வி நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்புகளை ஒதுக்கீடு வழங்க இடைக்கால தடை விதித்து உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.

இதே கோரிக்கையை முன்வைத்து மதுரையை சேர்ந்த சுரேஷ் என்பவரும் வழக்கு தாக்கல் செய்திருந்தார். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள் எம்.எம். சுந்தரேஷ், ஆனந்தி அமர்வு வன்னியர்களுக்கான 10.5 சதவீதம் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய கோரிய 2 வழக்குகளை சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றி உத்தரவிட்டிருக்கின்றனர். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மதுரை கிளையில் இதுவரை 4 வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதும் அதை சென்னை உயர்நீதிமன்ற முதன்மை அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.


Tags : Chennai High Court ,Vanni , Vanniyar, 10.5 per cent reservation, case, Chennai High Court
× RELATED மக்களவை தேர்தல் வாக்கு எண்ணிக்கையை...