×

மேட்டுப்பாளையம் - கோவை பயணிகள் ரயில் ஓராண்டுக்கு பின் விரைவு ரயிலாக இயக்கம்!: டிக்கெட் கட்டணம் மும்மடங்கு உயர்வு..!!

கோவை: மேட்டுப்பாளையம் - கோவை இடையேயான பயணிகள் ரயில் சேவை ஓராண்டுக்கு பின்னர் விரைவு ரயிலாக இயக்கப்பட்டது. கட்டணம் மும்மடங்காக உயர்த்தப்பட்டதால் குறைந்த அளவிலான பயணிகளே விரைவு ரயிலில் பயணம் செய்தனர். மேட்டுப்பாளையம் - கோவை மார்க்கத்தில் தினசரி காலையில் இயக்கப்படும் பயணிகள் ரயில், கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஓராண்டாக நிறுத்தப்பட்டது. தொடர்ந்து, வைரஸ் பரவல் குறைந்ததை அடுத்து பணிக்கு செல்வோர், கல்லூரி மாணவ மாணவிகளின் கோரிக்கையின் பேரில் பயணிகள் ரயில் சேவையானது விரைவு ரயில் சேவையாக மாற்றி காலை மற்றும் மாலையில் என இரு மார்க்கத்திலும் இயக்க முடிவு செய்யப்பட்டது.

அதேவேளையில் 10 ரூபாயாக இருந்த ரயில் கட்டணம் 30 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் ரயில் சேவை மீண்டும் தொடங்கிய முதல் நாளில் குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளுடன் விரைவு ரயில் இயக்கப்பட்டது. பெரியநாயக்கன் பாளையம் மற்றும் துடியலூர் நிறுத்தங்களில் விரைவு ரயில் நிறுத்தப்படமாட்டாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஓராண்டுக்கு பின்னர் ரயில் சேவை இயக்கப்படுவது மகிழ்ச்சி அளித்தாலும் கட்டணத்தை குறைக்க வேண்டும், அனைத்து ரயில் நிலையங்களிலும் நின்று செல்லும் வகையில் ரயில் இயக்கப்பட வேண்டும் என்பது பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.


Tags : Coime , Mettupalayam - Coimbatore, passenger train, ticket price
× RELATED பூனை காணவில்லை; கண்டுபிடித்து...