×

பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ரூ.2000 கோடி பாரத் நெட் டெண்டருக்கு சத்தமின்றி அனுமதி கொடுத்துள்ளது மத்திய அரசு!

டெல்லி : பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய ரூ.2000 கோடி பாரத் நெட் டெண்டருக்கு மத்திய அரசு சத்தமின்றி அனுமதி கொடுத்துள்ளது.பாரத்நெட் திட்டம் என்பது கிராமப்புறங்களில் அதிவேக இன்டெர்நெட் இணைப்புகளைத் தரும் மத்திய அரசின் திட்டமாகும். 12,524 கிராமங்களில் இன்டர்நெட் இணைப்பு வழங்க ரூபாய் 1,950 கோடி செலவில் இந்தத் திட்டம் வகுக்கப்பட்டிருந்தது. ஊராட்சிப் பகுதிகளில் தகவல் தொழில்நுட்பப் புரட்சிகளை ஏற்படுத்த இந்த பாரத்நெட் திட்டங்கள் உதவும் என அமைச்சர்கள் பலரும் தொடர்ந்து கூறிவந்தனர்.

இத்திட்டத்திற்கான பணிகளை தமிழ்நாடு ஃபைபர்நெட் கழகம் (TANFINET) மேற்கொண்டு வந்தது. ஆனால், டெண்டர் விடுவதில் முறைகேடுகள் இருப்பதாக அறப்போர் இயக்கம், திமுக குற்றம்சாட்டி வந்தன. குறிப்பிட்ட சில நிறுவனங்களில் ஒப்பந்தத்தைப் பெற ஏதுவாக நிபந்தனைகள் விதிக்கப்பட்டதாக சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் குற்றச்சாட்டுகளை எழுப்பி வந்தனர்.

தமிழக அரசு இந்தத் திட்டம் தொடர்பான விளக்கங்களை மத்திய வர்த்தக அமைச்சகம் மற்றும் நீதிமன்றங்களுக்குத் தொடர்ந்து அளித்து வந்தது. இதையடுத்து மத்திய வர்த்தக அமைச்சகம், டெண்டர் விதிகளை அரசு முறையாகப் பின்பற்றவில்லை என்றுகூறி பாரத்நெட் திட்டத்தின் டெண்டரை ரத்து செய்து அறிவித்தது. மத்திய அரசு மற்றும் உயர்நீதிமன்றத்தின் தலையீட்டை அடுத்து சில நிபந்தனைகளை மாற்றியது TANFINET நிறுவனம்.இந்த நிலையில், சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிப்பிற்கு முந்தைய நாளான பிப்ரவரி 25ம் தேதி பாரத் நெட் டெண்டருக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.தேர்தல் நடத்தைவிதி அமலுக்கு வரும் முந்தைய நாள் பாரத் நெட் டெண்டருக்கு அனுமதி தரப்பட்டு இருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.


Tags : Central Government ,Bharat NET , BharatNet Tender, Central Government, Fibernet Corporation
× RELATED குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்.....