×

சென்னை - புதுச்சேரி வரையிலான பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும்: ஜனநாயக வாலிபர் சங்கம் ரயில்வேவுக்கு கோரிக்கை

மதுராந்தகம்: கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்ட சென்னை - புதுச்சேரி வரையிலான பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம், தெற்கு தென்னக ரயில்வேவுக்கு கோரிக்கை வைத்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம், செய்யூர் ஆகிய பகுதிகளில் இருந்து கட்டுமான தொழிலாளர்கள், பெயின்டர்கள், பிளம்பர்கள், தனியர் தொழில் நிறுவன ஊழியர்கள், அரசு ஊழியர்கள், மாணவ, மாணவிகள் என ஆயிரக்கணக்கானோர் தினமும் சென்னைக்கு சென்று வருகின்றனர்.

இவர்கள், தாம்பரம்-விழுப்புரம் பயணிகள் ரயில், சென்னை - புதுச்சேரி மின்சார பயணிகள் ரயில், அரக்கோணம் - சென்னை விழுப்புரம் மின்சார ரயில், சென்னை புதுச்சேரி விரைவு ரயில் ஆகிய ரயில்களை பயன்படுத்தி வந்தனர். இந்த ரயில்கள் அனைத்தும் கொரோனா பரவல் காரணமாக சுமார் ஓராண்டுக்கு முன்  நிறுத்தப்பட்டன. தற்போது, கொரோனா படிப்படியாக குறைந்துவரும் வேளையில், அரசு பள்ளி, கல்லூரிகள், அரசு நிறுவனங்கள், கட்டுமான பணிகள் அனைத்தும் மீண்டும் துவங்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ரயில்கள் இயக்கப்படாததால் மதுராந்தகம், செய்யூர் வட்டங்களுக்கு உட்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள்  பஸ்களில் செங்கல்பட்டுக்கு சென்று, அங்கிருந்து மின்சார ரயில்கள் மூலம் சென்னைக்கு சென்று பணிகளை முடித்து மாலையில் வீடு திரும்புகின்றனர். இதனால் பெரும் சிரமம் ஏற்படுகிறது. இதையொட்டி, நிறுத்தப்பட்டுள்ள பயணிகள் ரயில்களை மீண்டும் இயக்கினால் செய்யூர், மதுராந்தகம் வட்டங்களுக்கு உட்பட்ட கிராமமப்புற மக்கள் மேல்மருவத்தூர், மதுராந்தகம் ஆகிய ரயில் நிலையங்களில் இருந்து சென்னைக்கு சென்றுவர முடியும்.

கடந்த ஒரு வருடமாக கொரோனா காரணமாக வாழ்வாதாரத்தை இழந்த கட்டுமான பணியாளர்கள், இளைஞர்கள் தற்போது அரசு ஏற்படுத்தியுள்ள தளர்வுகளை பயன்படுத்தி சென்னைக்கு பணிக்கு சென்று வருகின்றனர். ஆனால், அரசு பஸ், ரயில் சேவைகள் சரிவர இல்லாததால் மிகவும் சிரமம் அடைகின்றனர். எனவே விழுப்புரம், புதுச்சேரி ஆகிய பகுதிகளுக்கு இயக்கப்பட்ட பயணிகள் ரயில்களையும், தற்போது இயக்கப்படும் சென்னை - புதுச்சேரி  விரைவு ரயிலை கூடுதல் பெட்டிகளுடன் முன்பதிவு இல்லாத விரைவு ரயிலாக இயக்கவும், செங்கல்பட்டில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் மின்சார ரயில்களில் நேரக்கட்டுப்பாடுகளை விலக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.   


Tags : Chennai ,Pondicherry ,Democratic Youth Association , From Chennai to Puducherry Passenger trains To run again: Democratic Youth Association demands for railways
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...