×

திருப்போரூர் ஒன்றிய அலுவலகத்தில் உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு மையத்தில் எஸ்பி ஆய்வு

திருப்போரூர்: திருப்ேபாரூர் ஒன்றிய அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு அறையை, எஸ்பி ஆய்வு செய்தார். திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் உள்ள 417 வாக்குப்பதிவு மையங்களில் பயன்படுத்தப்பட உள்ள வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் முதல் மாடியில் வைக்கப்பட்டுள்ளன. சீல் வைக்கப்பட்டுள்ள அந்த அறையின் உள்ளேயும், வெளியேயும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. மேலும், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.

 இந்தவேளையில் நேற்று முன்தினம் நெல்லை மாவட்டத்தில் உள்ள மையம் ஒன்றின் ஜன்னல் கதவுகள், கண்காணிப்பு கேமராக்கள் உடைக்கப்பட்டன. இதையடுத்து அனைத்து இயந்திரங்கள் வைக்கப்பட்ட மையங்களுக்கு பாதுகாப்பை பலப்படுத்துமாறு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. இதைதொடர்ந்து, திருப்போரூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள கட்டிடத்தை நேற்று மாலை செங்கல்பட்டு எஸ்பி சுந்தரவதனம் பார்வையிட்டார். அப்போது அனைத்து போலீசாரையும் அழைத்து பேசிய அவர், கண்காணிப்பை மிகவும் பலப்படுத்த வேண்டும், தேவைப்பட்டால்  மாற்று போலீசார் வந்த பிறகே இந்த இடத்தை விட்டு செல்ல வேண்டும் என அறிவுறுத்தினார்.

மேலும், இயந்திரங்கள் வைக்கப்பட்ட பகுதியில் 2 கேமராக்கள் செயலிழந்து இருப்பதை பார்த்த அவர், புதிய கேமராக்கள் பொருத்த உத்தரவிட்டார். இன்று  முதல் வேட்பு மனுத் தாக்கல் செய்ய வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பதால், கூடுதல் போலீசாரை பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த அவர் உத்தரவிட்டார். அதேபோன்று, செங்கல்பட்டு கலெக்டர் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அவருடன் திருப்போரூர் தொகுதி தேர்தல் அலுவலர் சுப்பிரமணியன், வட்டாட்சியர் ரஞ்சனி ஆகியோர் இருந்தனர்.


Tags : SP ,Tirupur Union , In the Thiruporur Union Office SP inspection at polling center security center
× RELATED நாடாளுமன்ற தேர்தலின்போது கட்சி பாகுபாடின்றி பணியாற்ற வேண்டும்