நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கொண்டு வருவதை எதிர்த்து சட்டப்போராட்டம் நடத்துவோம்: தமிழ்நாடு அரசு பள்ளியில் படித்த மற்றும் படிக்கின்ற செவிலியர்கள் சங்க தலைவர் கே.பூமிநாதன்

நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு என்பது வசதி படைத்தவர்கள் பயனடைய கொண்டு வரப்பட்டுள்ளது. எம்பிபிஎஸ் படிப்புக்கு நீட் கொண்டு வந்ததால், தமிழகத்தில் வட மாநிலம் மற்றும் மேல் தட்டு மக்களே மருத்துவ படிப்பை படிக்கும் நிலை ஏற்பட்டது. அதே போன்று தான் நர்சிங்கில் படிப்பிலும் ஏற்படும். வசதி படைத்தவர்களால் மட்டுமே நீட் தேர்வுக்கு கோச்சிங் வகுப்பில் சென்று சேர முடியும். குறிப்பாக, அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்கள் தான் நர்சிங் படிப்புக்கு நீட் கொண்டு வந்தால் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். பெரும்பாலும் 12ம் வகுப்பில் நல்ல மார்க் எடுத்த ஏழை எளிய மாணவர்கள் நர்சிங்கில் எளிதாக சேர முடிந்தது. அதனால், அவர்களின் மருத்துவ சேவை என்பதும் நன்றாக இருக்கும்.  

நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று நர்சிங் படித்தாலும், மீண்டும் அவர்கள் வேலைக்கு சேருவதற்காக ஒரு தேர்வு எழுத வேண்டியுள்ளது. இது நர்சிங் படிப்பவர்களுக்கு ஒரு பாரமாக உள்ளது. நர்சிங் படிப்புக்கு மத்திய அரசுக்கு ஒதுக்கீடு என்பது கிடையாது. இப்போது நீட் தேர்வு கொண்டு வரும் பட்சத்தில் மத்திய அரசுக்கு ஒதுக்கீடு தர வேண்டும். அப்படி கொடுக்கும் பட்சத்தில் அரசு நர்சிங் கல்லூரிகளில் பிற மாநிலங்களை சேர்ந்த மாணவர்களுக்கு ஒதுக்கீட வாய்ப்புள்ளது. இந்த ஒதுக்கீட்டால் பாதிக்கப்படுவது முழுக்க, முழுக்க தமிழக மாணவர்கள் தான். ஆனால், இனி அவர்கள் நீட் தேர்வில் சேருவது என்ற நிலை வரும் போது அவர்களுக்கு இடம் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

ஏற்கனவே,  அரசு பள்ளி மாணவர்களுக்கு எம்பிபிஎஸ் இட ஒதுக்கீட்டில் பாதிக்கப்பட்டனர். அவர்களுக்கு பல்வேறு போராட்டங்களுக்கு இடையில் தான் தமிழக அரசு சார்பில் உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் சேர வேண்டிய நிலை ஏற்பட்டது. பிஎஸ்சி படிப்புக்கு 4 வருடம், டிப்ளமோ 3 வருடம். ஆனால், இதில், டிப்ளமோ 3 வருட படிப்புக்கு நீட் கொண்டு வரப்படுகிறதா என்பதே தெரியவில்லை. தமிழகத்தில் 12ம் வகுப்பில் படிக்கும் போது நர்சிங் என்கிற தனிப்பாடப்பிரிவு உள்ளது. அந்த மாணவர்களுக்கு நர்சிங் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங்கில் குறிப்பிட்ட சதவீதம் ஒதுக்குகின்றனர். அவர்களுக்கு நீட் தேர்வு கொண்டு வந்தால் இட ஒதுக்கீடு கிடையாது. 12ம் வகுப்பு முடித்த கணக்கு பதிவியல், பொருளியல் படித்தவர் மாணவர்களுக்கும் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது.

டிப்ளமோ நர்சிங்கில் உதவி தொகை தரப்படுகிறது. இதன் மூலம் ஏழை எளிய மாணவர்கள் தொடர்ந்து படிக்க பயன்பட்டன. ஆனால், இனி எந்த பயனும் கிடைக்காத நிலை தான் உள்ளது. அரசு நர்சிங் கல்லூரி என்பது மிகவும் குறைவு தான். தனியார் நர்சிங் கல்லூரி தான் அதிகமாக உள்ளது. நர்சிங் படிக்க விரும்பும் ஏழை எளிய மாணவர்களுக்கு அரசு நர்சிங் கல்லூரிகளில் சீட் கிடைக்காத நிலை வரும் போது, அவர்கள் தனியார் நர்சிங் கல்லூரிகளில் தான் சேர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. டிப்ளமோ நர்சிங் படித்து முடித்தவர்கள் முதுநிலை நர்சிங் படிக்க விரும்புவர்களுக்கு நீட் தேர்வு உண்டா, இல்லையா என்பதும் கேள்வியாக உள்ளது. அப்படியிருந்தால் முதுநிலை படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து விடும்.

தமிழகத்தில் மருத்துவ தேர்வு வாரியத்தில் கொண்டு டிப்ளமோ, பிஎஸ்சி நர்சிங் மாணவர்களுக்கு போட்டி தேர்வு நடத்தி தகுதியானவர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். இதில், டிப்ளமோ நர்சிங் மாணவர்களுக்கு குறைவான வேலை வாய்ப்பு தான் இருக்கும். நீட் தேர்வு கொண்டு வந்தால் டிப்ளமோ நர்சிங் மாணவர்கள் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. நமது மாநிலத்திற்கு என்பது நர்சிங் படிப்பில் நீட் என்பது பொருந்தாது. தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் டிப்ளமோ நர்சிங் பொறுத்தவரையில் 2,500 இடமும், 5 அரசு கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங்கில் 250 மாணவர் சேர்க்கை நடக்கிறது. அரசில் ரூ.1,500 தான் கட்டணம் வசூலிக்கின்றனர். ஆனால், தனியார் கல்லூரிகளில் பல மடங்கு கட்டணம் வசூல் செய்கின்றனர். நீட் கொண்டு வந்தால் ஏழை எளிய மாணவர்கள் அரசு கல்லூரிகளுக்கு சீட் கிடைக்காது. அவர்கள் தனியார் நர்சிங்கில் தான் பணம் கொடுத்து சேர  வேண்டிய நிலை தான் ஏற்படும்.

தமிழக அரசை பொறுத்தவரையில் நீட் தேர்வை அமல்படுத்தக்கூடாது. நர்சிங் படிப்பில் நீட் தேர்வு கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். ஆரம்ப கட்டத்தில் எதிர்ப்பு கூற வேண்டும். மத்திய அரசு இந்த முடிவை கைவிட வேண்டும். இந்திய நர்சிங் கவுன்சில்  பெயரை மாற்றுகின்றனர். இது, தேவையில்லாத ஒன்று. கவுன்சில் என்பதை கமிஷன் மாற்றுவதால் எந்தவித பயனும் இல்லை. மருத்துவ படிப்பை மேம்படுத்த பல வழிமுறைகள் உள்ளது. ஆனால், அதை செய்யாமல் தேர்வு நடத்துவதால் வீழ்ச்சியை தான் ஏற்படுத்தும். இதனால், பாதிக்கப்படுவது அரசு மருத்துவமனைகள் தான். நர்சிங் படிப்புக்கு நீட் தேர்வு கொண்டு வருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைதியான வழியில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளோம். அதே நேரத்தில் சட்டப்போராட்டமும் நடத்துவோம்.

Related Stories:

>