×

தாம்பரம் - செங்கல்பட்டு வழித்தடத்தில் கூடுதல் ரயில்கள் இயக்கப்படுமா? பயணிகள் எதிர்பார்ப்பு

சென்னை: தாம்பரம் - செங்கல்பட்டு ரயில் வழித்தடத்தில் கூடுதலாக ரயில்களை இயக்க வேண்டும் என்று ரயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடற்கரை - தாம்பரம் இடையே, நான்கு ரயில் பாதைகள் உள்ளன. இதில் இரண்டு பாதைகள் மின்சார ரயில் போக்குவரத்திற்கும், இரண்டு பாதைகள் எக்ஸ்பிரஸ் ரயில்களும் இயக்கப்பட்டு வருகிறது. தாம்பரம் - செங்கல்பட்டு இடையே, இரண்டு ரயில் பாதைகள் மட்டுமே, தற்போது உள்ளன. இந்த வழித்தடத்தில் உள்ள பகுதிகள் சென்னை நகருக்கு இணையான வளர்ச்சியை பெற்று வருகின்றன. இதனால் தாம்பரம் - செங்கல்பட்டு இடையே கூடுதல் மின்சார ரயில்களை இயக்க வேண்டிய கட்டாயம் உள்ளது. ஆனால், இரண்டு ரயில் பாதைகள் மட்டுமே இருப்பதால், எக்ஸ்பிரஸ் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் குறிப்பிட்ட இடைவெளியில் மட்டுமே மின்சார ரயில்கள் இயக்கப்படுகின்றன.

இந்நிலையில், எதிர்கால போக்குவரத்து வசதியை கருத்தில் கொண்டு தாம்பரம் - செங்கல்பட்டு இடையே ரூ.256 கோடி செலவில் 30 கி.மீ துாரத்திற்கு 3வது அகல ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்காக கடந்த 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ம் தேதி தாம்பரத்தில் நடந்த விழாவில் அப்போதைய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு 3வது ரயில் பாதை பணியை துவக்கி வைத்தார். இந்த பணி ஒன்றரை ஆண்டுகளில் முடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் பணி மந்தமாக நடைபெறுவதால் 5 ஆண்டுகள் ஆகியும் இதுவரை பணிகள் முடிக்கப்படாமல் உள்ளது. மேலும், கூடுவாஞ்சேரி - சிங்கப்பெருமாள் கோவில் இடையே பாதை பணிகள் 2019ம் ஆண்டு செப்டம்பர் 30ம் தேதி முடிந்து, ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், விரைவு ரயில் இயக்கி, சோதனை நடத்தி, பயணியர் ரயில் இயக்க, அனுமதி கொடுத்தார்.

சிங்கப்பெருமாள் கோவில் - செங்கல்பட்டு இடையே, 8 கி.மீ பாதை பணி முடிந்து கடந்த 4ம் தேதி, ரயில்வே பாதுகாப்பு கமிஷனர், விரைவு ரயில் இயக்கி, சோதனை நடத்தினார். மேலும் கடற்கரை - செங்கல்பட்டு - திருமால்பூர் புறநகர் மின்சார ரயில்களில், பயணியர் நெருக்கடி அதிகம் உள்ளது. கடந்த 2018ம் ஆண்டு ஜூலையில், திருமால்பூர் ரயிலில் கூட்ட நெருக்கடியால் படியில் தொங்கியபடி பயணம் செய்த ஐந்து பயணிகள் பரங்கிமலை நிலையத்தில் பிளாட்பார தடுப்பு சுவரில் மோதி இறந்தனர்.

செங்கல்பட்டு ரயிலில் பயணம் செய்த மூன்று ஆண்கள், தாம்பரம் அருகே மின் கம்பத்தில் மோதி விழுந்ததில், ஒருவர் பலியானார். இருவர் படுகாயமடைந்தனர். கூடுதல் ரயில்கள் இயக்கப்பட்டிருந்தால், இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டிருக்காது.  
எனவே தாம்பரம் - செங்கல்பட்டு இடையே கூடுதல் மின்சார ரயில்கள் இயக்க வேண்டும் என்று புறநகர் மின்சார ரயில்களில் பயணம் செய்பவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த 2018ம் ஆண்டு ஜூலையில், திருமால்பூர் ரயிலில் கூட்ட நெருக்கடியால் படியில் தொங்கியபடி பயணம் செய்த ஐந்து பயணிகள் பரங்கிமலை நிலையத்தில் பிளாட்பார தடுப்பு சுவரில் மோதி இறந்தனர்.


Tags : Tambaram-Chengalpattu , Will there be additional trains on the Tambaram-Chengalpattu route? Passenger anticipation
× RELATED மனைவியை கொலை செய்த வழக்கில் கணவருக்கு...