×

மறைமலை நகர் அருகே பரபரப்பு வீட்டில் பதுக்கி வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்: 3 பேர் கைது; தேர்தல் நேரத்தில் சதி திட்டமா?

சென்னை: மறைமலைநகர் அருகே வீட்டில் நாட்டு வெடிகுண்டுகள் பதுக்கி வைத்திருந்த 3 பேரை போலீசார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மறைமலைநகர் பொத்தேரி அன்னை தெரசா தெருவில் உள்ள ஒரு வீட்டில், சந்தேகப்படும்படி சிலர் தங்கி, கஞ்சா விற்பனை மற்றும் கடத்தலில் ஈடுபட்டு வருவதாக மறைமலைநகர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், இன்ஸ்பெக்டர் நந்தகோபால் மற்றும் போலீசார் நேற்று காலை சம்பவ இடத்துக்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, போலீசாரை கண்டதும் அங்கிருந்த 3 வாலிபர்கள், தப்பியோட முயன்றனர். உடனே போலீசார் அவர்களை மடக்கி பிடித்தனர். விசாரணையில், கல்பாக்கம் அருகே கூவத்தூர் பகுதியை சேர்ந்த மதன்குமார்(23), திருக்கச்சூர் கிஷோர்(19), மண்ணிவாக்கம் கணேசன்(22) ஆகியோர் என தெரியவந்தது. இதனையடுத்து, அவர்களை கைது செய்த போலீசார், அந்த வீட்டில் பதுக்கி வைத்திருந்த 5 கிலோ கஞ்சா, 2 நாட்டு வெடிகுண்டுகள், 4 பட்டா கத்திகளை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, சட்டமன்ற தேர்தல் நேரத்தில், முன்விரோதம் காரணமாக யாரையாவது கொலை செய்ய கூலிப்படையை யாரேனும் ஏவி விட்டுள்ளனரா, அல்லது இவர்கள் நாசவேலைகள் செய்ய திட்டமிட்டு இருந்தனரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர்.

Tags : Maraimalai Nagar , Country bombs seized from a riot house near Maraimalai Nagar: 3 arrested; Is it a conspiracy plan at election time?
× RELATED மறைமலைநகர் மாருதி சபா ஆலயத்தில் கொடிமரம் அமைத்து கும்பாபிஷேகம்