விஜய் ஹசாரே டிராபி 4வது முறையாக மும்பை சாம்பியன்

புதுடெல்லி: விஜய் ஹசாரே டிராபி ஒருநாள் போட்டித் தொடரின் பைனலில் உத்தர பிரதேச அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை அணி, 4வது முறையாக சாம்பியன் பட்டம் வென்று சாதனை படைத்தது. டெல்லி, அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த உத்தர பிரதேச அணி 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 312 ரன் குவித்தது. தொடக்க வீரர்கள் மாதவ் கவுஷிக் - சமர்தி சிங் இணைந்து 26 ஓவரில் 122 ரன் சேர்த்தனர். சமர்த் சிங் 55 ரன் (73 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்), பிரியம் கார்க் 21, அக்‌ஷ்தீப் நாத் 55 ரன் (40 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர்.

அபாரமாக விளையாடி சதம் அடித்த மாதவ் கவுஷிக் 158 ரன் (156 பந்து, 15 பவுண்டரி, 4 சிக்சர்), உபேந்திரா யாதவ் 9 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மும்பை பந்துவீச்சில் தனுஷ் கோட்டியான் 2, சோலங்கி 1 விக்கெட் வீழ்த்தினர். இதையடுத்து, 50 ஓவரில் 313 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் களமிறங்கிய மும்பை அணி, கேப்டன் பிரித்வி ஷா, ஆதித்யா தாரே, ஷிவம் துபே ஆகியோரின் அதிரடி ஆட்டத்தால் 41.3 ஓவரிலேயே 4 விக்கெட் இழப்புக்கு 315 ரன் எடுத்து வெற்றியை வசப்படுத்தியது.

பிரித்வி ஷா 73 ரன் (39 பந்து, 10 பவுண்டரி, 4 சிக்சர்), ஜெய்ஷ்வால் 29, ஷாம்ஸ் முலானி 36, ஷிவம் துபே 42 ரன் (28 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி வெளியேறினர். ஆதித்யா தாரே 118 ரன் (107 பந்து, 18 பவுண்டரி), சர்பராஸ் கான் 3 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற மும்பை அணி, 4வது முறையாக விஜய் ஹசாரே டிராபியை கைப்பற்றியது. அந்த அணியின் ஆதித்யா தாரே ஆட்ட நாயகன் விருதும், பிரித்வி ஷா தொடர் நாயகன் விருதும் பெற்றனர். நடப்பு தொடரில் பிரித்வி 8 இன்னிங்சில் 827 ரன் குவித்து (அதிகம் 227*, சராசரி 165.40, சதம் 4, அரை சதம் 1) முதலிடம் பிடித்தார். கர்நாடகாவின் படிக்கல் (737), சமர்த் (613) அடுத்த இடங்களை பிடித்தனர்.

Related Stories:

>