×

இஷான் - கோஹ்லி அபார ஆட்டம் பதிலடி கொடுத்தது இந்தியா

அகமதாபாத்: இங்கிலாந்து அணியுடனான 2வது டி20 போட்டியில், இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்று பதிலடி கொடுத்தது. மோடி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடைபெற்ற இப்போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பந்துவீசியது. தவான், அக்சருக்கு பதிலாக சூரியகுமார், இஷான் அறிமுகமாகினர். இங்கிலாந்து அணியில் மார்க் வுட்டுக்கு பதிலாக டாம் கரன் சேர்க்கப்பட்டார். ராய், பட்லர் இருவரும் இன்னிங்சை தொடங்கினர். பட்லர் கோல்டன் டக் அவுட்டாக, ராய் - மாலன் ஜோடி 2வது விக்கெட்டுக்கு 63 ரன் சேர்த்தது. மாலன் 24 ரன் எடுத்து சாஹல் சுழலில் எல்பிடபுள்யு ஆனார். ராய் 46 ரன் (35 பந்து, 4 பவுண்டரி, 2 சிக்சர்) விளாசி வாஷிங்டன் பந்துவீச்சில் புவனேஷ்வர் வசம் பிடிபட்டார். கேப்டன் மோர்கன் 28 ரன், பென் ஸ்டோக்ஸ் 24 ரன் எடுத்து ஷர்துல் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தனர். இங்கிலாந்து 20 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 164 ரன் குவித்தது.

இந்திய பந்துவீச்சில் வாஷிங்டன், ஷர்துல் தலா 2, புவனேஷ்வர், சாஹல் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். இதைத் தொடர்ந்து, 20 ஓவரில் 165 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கியது. ராகுல், இஷான் இருவரும் துரத்தலை தொடங்கினர். ராகுல் டக் அவுட்டாகி ஏமாற்ற, இஷான் - கோஹ்லி இணைந்து 2வது விக்கெட்டுக்கு 93 ரன் சேர்த்தனர். முதல் போட்டியிலேயே அசத்தலாக விளையாடி அரை சதம் அடித்த இஷான் 56 ரன் (32 பந்து, 5 பவுண்டரி, 4 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். அடுத்து வந்த பன்ட் 13 பந்தில் 26 ரன் விளாசி (2 பவுண்டரி, 2 சிக்சர்) ஜார்டன் பந்துவீச்சில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இந்தியா 17.5 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 166 ரன் எடுத்து வென்று பதிலடி கொடுத்தது. கோஹ்லி 73 ரன் (49 பந்து, 5 பவுண்டரி, 3 சிக்சர்), ஷ்ரேயாஸ் 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இரு அணிகளும் 1-1 என சமநிலை வகிக்க, 3வது போட்டி நாளை நடக்கிறது.

Tags : Ishaan - Kohli ,India , Ishaan - Kohli retaliate
× RELATED வாடிக்கையாளர்கள் திருப்திதான் எங்களின் திருப்தி!