2வது டெஸ்ட் போட்டியில் ஆப்கானிஸ்தான் வெற்றி: தொடரை சமன் செய்தது

அபுதாபி: ஜிம்பாப்வே அணியுடனான 2வது டெஸ்டில், ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்று 1-1 என்ற கணக்கில் தொடரை சமன் செய்தது. ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நடந்த இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 545 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 287 ரன்னுக்கு சுருண்டு பாலோ ஆன் பெற்றது. 258 ரன் பின்தங்கிய நிலையில் 2வது இன்னிங்சை தொடர்ந்து விளையாடிய ஜிம்பாப்வே, நான்காம் நாள் ஆட்ட முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன் எடுத்திருந்தது.

கேப்டன் வில்லியம்ஸ் 106 ரன், டொனால்டு 63 ரன்னுடன் நேற்று கடைசி நாள் ஆட்டத்தை தொடங்கினர். டொனால்டு 95 ரன் (258 பந்து, 16 பவுண்டரி) விளாசி ரஷித் கான் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். வில்லியம்ஸ் - டொனால்டு ஜோடி 8வது விக்கெட்டுக்கு 187 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. முஸரபானி 17 ரன் எடுத்தார். விக்டர் டக் அவுட்டாக, ஜிம்பாப்வே 2வது இன்னிங்சில் 365 ரன்னுக்கு ஆல் அவுட்டானது (148.5 ஓவர்). வில்லியம்ஸ் 151 ரன்னுடன் (309 பந்து, 13 பவுண்டரி, 1 சிக்சர்) இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆப்கன் பந்துவீச்சில் ரஷித் கான் 62.5 ஓவர் வீசி 17 மெய்டன் உட்பட 137 ரன் விட்டுக்கொடுத்து 7 விக்கெட் கைப்பற்றினார். அடுத்து 108 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களமிறங்கிய ஆப்கானிஸ்தான், 26.1 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 108 ரன் எடுத்து வென்றது. இபார்கிம் ஸத்ரன் 29, ரகமத் ஷா 58 ரன் எடுத்து வெற்றிக்கு உதவினர். 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது. இரட்டை சதம் விளாசிய ஹஷ்மதுல்லா ஆட்ட நாயகன் விருது பெற்றார். ஜிம்பாப்வே கேப்டன் வில்லியம்ஸ் தொடர் நாயகன் விருது பெற்றார். அடுத்து இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோதுகின்றன. முதல் போட்டி அபுதாபியில் 17ம் தேதி நடக்கிறது.

Related Stories:

>