பூனம் ராவுத் சதம் வீண் தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா

லக்னோ: இந்திய மகளிர் அணியுடனான 4வது ஒருநாள் போட்டியில், 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்ற தென் ஆப்ரிக்கா 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்றதுடன் தொடரையும் கைப்பற்றியது. வாஜ்பாய் ஸ்டேடியத்தில் நேற்று நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற தென் ஆப்ரிக்கா முதலில் பந்துவீசியது. இந்தியா 50 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 266 ரன் குவித்தது. பிரியா பூனியா 32, மந்தனா 10, கேப்டன் மித்தாலி ராஜ் 45, ஹர்மான்பிரீத் 54 ரன் எடுத்து வெளியேறினர். பூனம் ராவுத் 104 ரன் (123 பந்து, 10 பவுண்டரி), தீப்தி 8 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

அடுத்து களமிறங்கிய தென் ஆப்ரிக்கா 48.4 ஓவரில் 3 விக்கெட் இழப்புக்கு 269 ரன் எடுத்து வென்றது. லிஸெல் லீ 69, கேப்டன் லாரா வுல்வார்ட் 53, மிக்னான் டு பிரீஸ் 61 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினர். லாரா குட்ஆல் 59 ரன், மரிஸன்னே காப் 22 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மொத்தம் 5 போட்டிகள் கொண்ட தொடரில் 3-1 என்ற கணக்கில் முன்னிலை பெற்ற தென் ஆப்ரிக்கா தொடரை கைப்பற்றியது. சம்பிரதாயமான கடைசி ஒருநாள் போட்டி நாளை மறுநாள் நடக்கிறது. அதைத் தொடர்ந்து, இரு அணிகளும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோத உள்ளன. மித்தாலி 7,000: நேற்றைய போட்டியில் 45 ரன் எடுத்த மித்தாலி ராஜ், ஒருநாள் போட்டிகளில் 7,000 ரன் மைல்கல்லை எட்டிய முதல் வீராங்கனை என்ற பெருமையை பெற்றார். அவர் 213 போட்டியில் 7019 ரன் (அதிகம் 125*, சராசரி 50.49, சதம் 7, அரை சதம் 54) எடுத்துள்ளார்.

Related Stories:

More