பணம் கடத்தலை தடுக்க வாகன கதவு, சக்கரங்களை சோதனை செய்ய வேண்டும்: பறக்கும் படையினருக்கு டிஜிபி உத்தரவு

சென்னை: தமிழக சட்டப்பேரவை தேர்தல் வரும் ஏப்ரல் 6 ம் தேதி நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகள் வேட்பாளர்களை அறிவித்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். நடத்தை விதிமுறைகள் காரணமாக தமிழகம் முழுவதும் மாவட்ட வாரியாக அந்தந்த மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தேர்தல் சிறப்பு கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. மேலும், ஓட்டுக்கு பணம் கடத்துவதை கண்காணிக்கவும், வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவதை கண்காணிக்க மாவட்ட வாரியாக பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தமிழக தேர்தல் அதிகாரி அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்களுடனான ஆலோசனை கூட்டம் நேற்று முன்தினம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அரசியல் கட்சிகள் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை கண்காணிக்கவும், பிடிக்கவும் முக்கிய ஆலோசனைகள் வழங்கியதாக கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தை தொடர்ந்து தமிழக டிஜிபி திரிபாதி சென்னை உட்பட தமிழகம் முழுவதும் தேர்தல் பணியில் ஈடுபட்டு வரும் பறக்கும் படையினர் மற்றும் போலீசாருக்கு சில உத்தரவுகள் பிறப்பித்துள்ளார். அதில், முக்கியமாக கார் மற்றும் வாகனங்களில் பிரத்தியேக அறை அமைத்து பணம் கடத்துவதை தடுக்கும் வகையில், பறக்கும் படையினர் வாகன தணிக்கையில் ஈடுபடும் போது, வாகனத்தின் சக்கரம், கதவுகள், ஜன்னல்கள் உட்புறம், இருக்கையின் அடிப்பகுதிகளிலும் கட்டாயம் சோதனை நடத்த வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லும் பணம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்று டிஜிபி திரிபாதி உத்தரவிட்டுள்ளார்.

Related Stories:

>