×

டெல்லி எல்லையில் நெடுஞ்சாலையில் வீடு, போர்வெல் அமைத்த விவசாயிகள் மீது போலீஸ் வழக்கு

சோனிபட்: டெல்லி எல்லையில் நெடுஞ்சாலையில் செங்கல் வீடுகள், போர்வெல் அமைத்த விவசாயிகள் மீது அரியானா போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். மத்திய வேளாண் சட்டங்களை ரத்து செய்யக் கோரி, மூன்று மாதங்களுக்கும் மேலாக டெல்லி எல்லைகளான சிங்கு, திக்ரி மற்றும் காஜிப்பூர் நெடுஞ்சாலைகளில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இன்னும் நீண்ட காலத்திற்கு போராட வேண்டியிருப்பதால், நெடுஞ்சாலை ஓரம் தற்போது அவர்கள் தற்காலிக குடியிருப்புகளை அமைத்து வருகின்றனர். இதுவரை சுமார் 25 வீடுகள் கட்டப்பட்ட நிலையில், 2000 வீடுகள் வரை கட்ட இருப்பதாக விவசாயிகள் தெரிவித்தனர். இதுமட்டுமின்றி குடிநீர் வசதிக்காக சில இடங்களில் போர்வெல்லும் அமைத்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், சிங்கு எல்லையில் விவசாயிகள் சட்டவிரோதமாக நடந்துகொள்வதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையமும், உள்ளூர் அதிகாரிகளும் புகார் அளித்தனர். இதன் அடிப்படையில் அரியானா போலீசார் விவசாயிகள் மீது இரண்டு வழக்குகளைப் பதிவு செய்துள்ளனர். போலீசார் கூறுகையில், ‘‘அரியானா மாநிலம், சோனிபட் மாவட்டத்தில் சிங்கு எல்லையில் விவசாயிகள் போராடி வருகின்றனர். இவர்கள் என்.ஹெச் 44 நெடுஞ்சாலையில் சட்டவிரோதமாக போர்வெல் போடுவதாகவும், வீடுகள் எழுப்புவதாகவும் புகார்கள் வந்தன. புகாரின் அடிப்படையில் சட்டவிரோதமாக நெடுஞ்சாலைகளில் போர்வெல் போடுதல், கான்க்ரீட் கட்டடங்களை எழுப்புதல் என்ற இரண்டு வெவ்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகளும் நிறுத்தப்பட்டுள்ளன’’ என்று கூறப்பட்டுள்ளது.

* டிசம்பர் வரை போராட்டம்
தேர்தல் நடைபெறும் மேற்கு வங்க மாநிலத்தில் பாஜவுக்கு எதிராக விவசாய சங்க பிரதிநிதிகள் பிரசாரம் செய்து வருகின்றனர். கொல்கத்தாவில் பாரதிய கிசான் விவசாய சங்க தலைவரான ராகேஷ் டிகைத்திடம் ‘டெல்லி போராட்டம் எப்போது முடியும்’ என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ‘‘இந்த ஆண்டு டிசம்பர் வரை போராட்டம் தொடரும்’’ என்று அறிவித்துள்ளார். மேலும், டெல்லி நோக்கி மீண்டும் டிராக்டர் பேரணி நடத்தப் போவதாகவும், நாடாளுமன்றத்தின் முன்பாக மண்டி அமைத்து விவசாய விளைபொருட்களை விற்பனை செய்யப்போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Tags : Delhi border , Police case against farmers who set up house, borewell on highway on Delhi border
× RELATED டெல்லியில் விவசாயிகளின் பேரணி...