×

மாற்றுத்திறனாளிகள், மூத்த குடிமக்கள், கோவிட் பாதிப்பு உள்ள வாக்காளர்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் தபால் வாக்களிக்கும் வசதி: வழிகாட்டி நெறிமுறைகள் ஆணையம் அறிவிப்பு

சென்னை: தமிழக தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையம், தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான 2021 பொதுத்தேர்தல் மற்றும் கன்னியாகுமரி பாராளுமன்ற இடைத்தேர்தலில் மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் கோவிட் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட அல்லது நோய் தொற்று இருக்கலாம் என யூகத்திற்கு உரிய வாக்காளர்கள் ஆகியோருக்கு விருப்பத்தின் அடிப்படையில் தபால் வாக்கு முறையில் வாக்களிக்கும் வசதியை அளித்துள்ளது.  

தேர்தல் நடத்தும் அலுவலரால் தரப்பட்ட தகவல்களின் அடிப்படையில்,  தபால் ஓட்டுப் பெறத் தகுதியான மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் கோவிட் நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்ட அல்லது நோய் தொற்று இருக்கலாம் என யூகத்திற்கு உரிய வாக்காளர்களின் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்கு கோரும் விண்ணப்பங்களை மேற்படி வாக்காளர்களிடம் அளிப்பார்கள்.  தேர்தல் அறிவிக்கை வெளியிடப்பட்ட 5 நாட்களுக்குள் தபால் மூலம் வாக்களிக்க விருப்பம் உள்ளவர்களிடமிருந்து ஒப்புதல் பெறுவதுடன் விண்ணப்பப் படிவம் 12யை பூர்த்தி செய்து பெற்றுக் கொள்வார்கள்.

மேற்கண்ட வாக்காளர்களின் வசிப்பிடத்திற்கு செல்லுமுன், செல்ல இருக்கும் நாள் மற்றும் நேரம் குறித்த விவரங்களை தொலைபேசி மூலமாகவோ அல்லது அஞ்சல் மூலமாகவோ வாக்குப்பதிவு செய்யும் அதிகாரிகள் தெரிவிப்பார்கள். அவ்வாறு தபால் ஓட்டு பெறுவதற்காக அதிகாரிகள் வரும் போது, மேற்படி ஓட்டளிப்பதை பார்வையிட தகுதியான ஒருவரை வாக்காளர்களே தேர்வு செய்து பார்வையிட செய்யலாம்.தபால் ஓட்டுகளை பதிவு செய்வதற்காக அமைக்கப்பட்ட அதிகாரிகள் குழு, வாக்காளர்களுக்கு வாக்குப்பதிவு செய்யும் வழிமுறைகளை தெளிவுபடுத்துவார்கள். வாக்காளர்களால் சரியாக பூர்த்தி செய்யப்பட்டு, கையொப்பமிடப்பட்டு, வாக்குப்பதிவு அதிகாரியால் சான்றளிக்கப்பட்ட உறுதியளிக்கும் படிவமான 13 படிவத்துடன்,  ஓட்டு பதிவு  செய்யப்பட்ட வாக்குச் சீட்டை கடித உறையினுள் வைத்து, ஒட்டி அதனை பெரிய கடித  உறையானயினுள் வைத்து, ஒட்டி அக்குழுவிடம் வாக்காளர்கள்  ஒப்படைக்க வேண்டும்.
 
வாக்காளர்கள் எவ்வித அச்சுறுத்தல்களுக்கும் ஆட்படாமல் சுயமாக அவர்களது தேர்விற்குரிய வேட்பாளர்களுக்கு ஓட்டளித்தார்கள் என்பதை தபால் வாக்குப்பதிவு செய்யும் அதிகாரிகள் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். காவல்துறை பாதுகாப்பு வழங்கப்படும். வாக்குப்பதிவு செய்யும் அதிகாரிகள் கொண்ட குழுவோடு ஒரு நுண் பார்வையாளரும்  செல்வர். தபால் ஓட்டளிக்கும் நிகழ்வு முழுவதும் காணொளியாக  பதிவு செய்யப்பட வேண்டும். அவ்வாறு காணொளி பதிவு செய்யும் போது ரகசிய வாக்குமுறை கடைபிடிப்பதை மீறாமல் பதிவு செய்யப்பட வேண்டும்.

வாக்குப்பதிவு செய்ய வரும் குழுவின் வருகையின் போது வாக்காளர் வீட்டில் இல்லையெனில், முன்கூட்டியே தகவல் அளித்து இரண்டாவது முறையும் வருகை தருவர். அதிகாரிகளது இரண்டாவது வருகையின் போதும் வாக்காளர் வீட்டில் இல்லையெனில் மீண்டும் வருகை தரமாட்டார்கள். தபால் வாக்கு அளிக்க அனுமதிக்கப்பட்ட மேற்கண்ட வாக்காளர்கள் வாக்குச்சாவடிக்குச்  சென்று வாக்களிக்க  அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

Tags : Disabled, Senior Citizens, Govt Influence Post Vote
× RELATED கலைஞர் மகளிர் உரிமை தொகை சமூகநீதி...