×

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடக்கும் 5 விழாவை நடத்த அனுமதி அளித்துள்ளோம்: ஐகோர்ட்டில் அறநிலைய துறை தகவல்

சென்னை: கொரோனா ஊரடங்கு காரணமாக ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நிறுத்தப்பட்ட ஐந்து விழாக்களை நடத்த வேண்டும் என்று  உத்தரவிட்டுள்ளதாக இந்து சமய அறநிலைய துறை தரப்பில் ஐகோர்ட்டில் தெரிவிக்கப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக கோயில்கள் மூடப்பட்டதால், ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் நடத்த வேண்டிய விழாக்கள், பண்டிகைகளை நடத்துவது குறித்து, மத தலைவர்கள் அடங்கிய குழுவை அமைத்து முடிவெடுக்கக் கோரி, திருச்சி ஸ்ரீரங்கத்தைச் சேர்ந்த ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த உயர் நீதிமன்றம், வரும் ஜூலை வரை ஸ்ரீரங்கம் கோயிலில் நடக்க உள்ள விழாக்கள், பண்டிகைகள் எப்படி நடத்துவது என்பது குறித்து, மத தலைவர்களுடன் கலந்து பேசி,  அறிக்கை அளிக்க உத்தரவிட்டனர். இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, கூட்டம் நடத்தப்படாதது குறித்து கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், கூட்டத்தை கூட்டி முடிவை தெரிவிக்க உத்தரவிட்டிருந்தனர். இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி மற்றும் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அடங்கிய அமர்வில்  விசாரணைக்கு வந்த போது, உயர் நீதிமன்ற உத்தரவின்படி, கடந்த பிப்ரவரி 22ம் தேதி அதிகாரிகள், மத தலைவர்கள் கூட்டம் கூட்டப்பட்டதாகவும்,  நிறுத்தப்பட்ட ஐந்து விழாக்களை நடத்த முடிவெடுத்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாகவும் அறநிலையத் துறை தரப்பு வக்கீல் தெரிவித்தார். இதை பதிவு செய்த நீதிபதிகள், விழாக்களை கோயில் மரபுகளின்படியும், ஆகம விதிகளின்படியும் விரைந்து நடத்த கோயில் நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, வழக்கை முடித்து வைத்தனர்.

Tags : Srirangam Ranganathar Temple ,Charitable Department ,iCourt , It will be held at Srirangam Ranganathar Temple 5 We have given permission to hold the ceremony: Information of the Department of the Treasury in the iCourt
× RELATED ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில்...