×

ஸ்ரீகாளஹஸ்தியில் 9ம் நாள் பிரமோற்சவம் சிவன், பார்வதி திருக்கல்யாண உற்சவம்: திரளான பக்தர்கள் தரிசனம்

காளஹஸ்தி: ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயில் பிரமோற்சவத்தின் 9ம் நாளான நேற்று சிவன், பார்வதிதேவியின் திருக்கல்யாண உற்சவம் கோலாகலமாக நடந்தது. இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். ஆந்திர மாநிலம், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரமோற்சவம் கடந்த 6ம் தேதி தொடங்கியது. வருகிற 19ம் தேதியுடன் பிரமோற்சவம் நிறைவு பெறுகிறது. பிரமோற்சவத்தின் 9ம் நாளான நேற்று அதிகாலை சிவன், பார்வதிதேவி திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடைபெற்றது. முன்னதாக, சிவபெருமான் யானை வாகனத்தில் கோயில் திருமண மண்டபத்திற்கு நேற்று முன்தினம் நள்ளிரவில் வந்தார்.

தொடர்ந்து, மணமகள் பார்வதிதேவி தங்க, வைர அணிகலன்களால் அலங்கரித்து சிம்ம வாகனத்தில் திருமண மண்டபத்திற்கு வந்தார். அங்கு, ஹோமம் வளர்த்து, வேத மந்திரங்கள் மற்றும் மங்கள வாத்தியங்கள் முழங்க ஆதி தம்பதியர்களின் திருக்கல்யாண உற்சவம் நடந்தது. திருக்கல்யாண உற்சவத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்திருந்தனர். புதுமண தம்பதிகளான சிவன், பார்வதிதேவி மணக்கோலத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் தங்க யானை வாகனத்திலும், ஞானபிரசுனாம்பிகை தாயார் தங்க சிம்ம வாகனத்திலும் கோயிலுக்கு திரும்பினர். தொடர்ந்து, நேற்று இரவு 8 மணியளவில் கோயில் வளாகத்தில் உள்ள ஸ்ரீகிருஷ்ண தேவராயர் மண்டபத்தில் நடராஜர் சுவாமி திருக்கல்யாண உற்சவம் நடைப்பெற்றது. இதில், கோயில் நிர்வாக அதிகாரி பெத்திராஜூ, அர்ச்சகர்கள் மற்றும் வேத பண்டிதர்கள் உட்பட ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Tags : Pramorsavam Shiva ,Parvati Tirukkalyana festival ,Srikalahasti , 9th day of Pramorsavam at Srikalahasti Shiva, Parvati Tirukkalyana festival: Darshan of large number of devotees
× RELATED திருப்பதி, சித்தூர், ஸ்ரீகாளஹஸ்தியில் யுகாதி பண்டிகை கோலாகல கொண்டாட்டம்