அம்பானி வீட்டருகே மர்ம கார் விவகாரம் மும்பை போலீஸ் அதிகாரி கைது: என்ஐஏ அதிரடி

மும்பை: தொழிலதிபர் முகேஷ் அம்பானி வீட்டு முன்பு நிறுத்தப்பட்டிருந்த மர்ம கார் விவகாரத்தில், திடீர் திருப்பமாக போலீஸ் அதிகாரி சச்சின் வேஸ் கைது செய்யப்பட்டுள்ளார். ரிலையன்ஸ் நிறுவன தலைவரான முகேஷ் அம்பானியின் வீடு தெற்கு மும்பையின் கம்பலா ஹில் பகுதியில் உள்ளது. அண்டிலியா ஹவுஸ் என்று குறிப்பிடப்படும் இந்த வீட்டருகே கடந்த பிப்ரவரி 25ம் தேதியன்று ஜெல்லட்டின் வெடிபொருட்கள் நிரம்பிய மர்ம கார் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. முகேஷ் அம்பானிக்கு மிரட்டல் விடுக்கும்விதமாக, ‘இது வெறும் டிரெய்லர்தான்’ என்ற கடிதத்தையும் காரிலிருந்து போலீசார் கைப்பற்றினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக விசாரணை தீவிரப்படுத்தப்பட்ட நிலையில் அந்தக் காரின் உரிமையாளரும் தானேவைச் சேர்ந்தவருமான மன்சூக் ஹிரன் மர்மமான முறையில் இறந்தார். இந்த வழக்கு தொடர்பாக ஹிரன் மனைவியிடம் மகாராஷ்டிரா தீவிரவாத தடுப்பு போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது, கடந்த நவம்பர் மாதம் மும்பை போலீஸ் அதிகாரி சச்சின் வேஸிடம் தனது கணவர் மன்சூக் ஹிரன் எஸ்யுவி காரை ஒப்படைத்தார் என ஹிரன் மனைவி தெரிவித்திருந்தார். அதுமட்டுமல்லாமல் தனது கணவர் ஹிரன் மர்ம சாவில், போலீஸ் அதிகாரி சச்சின் வேஸுக்கு தொடர்பு இருக்கலாம் என ஹிரன் மனைவி சந்தேகப்பட்டார்.

அதன்பின் இந்த வழக்கு தேசிய புலனாய்வு அமைப்புக்கு (என்ஐஏ) மாற்றப்பட்டது. இதையடுத்து, போலீஸ் அதிகாரி சச்சின் வேஸை தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்திருந்தனர். தெற்கு மும்பையில் உள்ள கம்பாலா ஹில்ஸ் பகுதியில் உள்ள தேசிய புலனாய்வு அமைப்பு அலுவலகத்துக்கு நேற்று முன்தினம் காலை 11.30 மணிக்கு சச்சின் வேஸ் விசாரணைக்கு ஆஜராகினார். அவரிடம் 12 மணிநேரம் தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தி, இரவு 11.50 மணிக்கு கைது செய்தனர்.இந்த கைது விவகாரம் மும்பை காவல் துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

* மும்பையில் சர்ச்சைக்குரிய காவல் அதிகாரியாக அடிக்கடி செய்திகளில் அடிபடுபவர் சச்சின் வேஸ்.

* இவர் பிரபல என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்.

* கைது செய்யப்பட்ட சச்சின் வேஸை என்ஐஏ அதிகாரிகள் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். வரும் 25ம் தேதி வரை சச்சினை போலீஸ் காவலில் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி தந்துள்ளது.

Related Stories:

More