ஆட்டோ மீது வாகனம் மோதல்: 5 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலி..! 9 பேர் படுகாயம்

திருமலை: ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தில் இன்று அதிகாலை ஆட்டோ மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் 5 தொழிலாளர்கள் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் படுகாயம் அடைந்தனர். ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டம் நூஜிவேடு மண்டலம் லயன்தாண்டா கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளர்கள் 14 பேர் இன்று அதிகாலை ஒரு ஷேர் ஆட்டோவில் வேலைக்கு சென்றனர். கொல்லப்பள்ளி தேசிய நெடுஞ்சாலையில் சென்றபோது அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம், ஆட்டோ மீது மோதி விட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் ஆட்டோ சுக்குநூறாக நொறுங்கியது. அதில் பயணம் செய்த பெண் தொழிலாளர்கள் உள்பட 5 பேர் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். 9 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த விபத்தை கண்டு, அவ்வழியாக சென்ற வாகன ஓட்டிகள் அதிர்ச்சியடைந்தனர். உடனே இதுகுறித்து நூஜிவேடு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். மேலும் படுகாயம் அடைந்தவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு நூஜிவேடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் 5பேரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்கு பதிவு செய்து இறந்தவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் குறித்தும், சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி காமராவில் பதிவான காட்சிகளில் இருந்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்தும் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: