கோவில்பட்டியில் தேர்தல் பறக்கும் படை அலுவலரை மிரட்டிய புகாரில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு..!

கோவில்பட்டி: கோவில்பட்டியில் அரசு பணியாளரை பணி செய்யவிடாமல் தடுத்ததாக அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் வருகிற 6ம் தேதி நடக்கிறது. இதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் விதிமுறைகள் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான கடம்பூர் ராஜூ நேற்று முன்தினம் (மார்ச்12) காலை தனது சொந்த ஊரான கடம்பூரில் இருந்து கோவில்பட்டிக்கு காரில் சென்றார்.

கோவில்பட்டி அருகே ஊத்துபட்டி என்ற இடத்தில் கார் சென்றபோது அமைச்சர் கடம்பூர் ராஜூ மற்றும் அவருடன் வந்த நிர்வாகிகள் காரை தேர்தல் பறக்கும் படை அலுவலர் மாரிமுத்து, எஸ்.ஐ.முருகன் மற்றும் போலீசார் கொண்ட பறக்கும் படை குழுவினர் திடீர் சோதனை நடத்தினர். ஏற்கனவே கடந்த வாரம் அமைச்சர் கடம்பூர் ராஜூ கழுகுமலை பகுதியில் காரில் சென்றபோதும் இதே பறக்கும் படை குழுவினர் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினரிடம் அமைச்சர் கேட்டபோது,

தாங்கள் கடமையை செய்வதாக பறக்கும் படையினர் அமைச்சரிடம் தெரிவித்துள்ளனர். இதனிடையே பறக்கும் படை சோதனையின்போது அமைச்சர் கடம்பூர் ராஜூ, உரிய ஒத்துழைப்பு அளிக்கவில்லையென பறக்கும் படை அலுவலர் மாரிமுத்து, நாலாட்டின்புதூர் போலீசில் புகார் அளித்துள்ளார். இதற்கிடையில் அவசர அவசரமாக அந்த பறக்கும்படை அதிகாரி விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதிக்கு மாற்றப்பட்டிருந்தார். இதற்கு பல தரப்பில் இருந்தும் எதிப்பு கிளம்பியது.

இதனையடுத்து அவர் மீண்டும் கோவில்பட்டி தொகுதிக்கே மாற்றப்பட்டார். இந்நிலையில் அந்த பறக்கும்படை அதிகாரி அளித்த புகாரின் பேரில் அமைச்சர் கடம்பூர் ராஜூ மீது அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல் (இந்திய தண்டனை சட்டம் பிரிவு 353), மிரட்டல் (இந்திய தண்டனை சட்டம் பிரிவு 506/1) என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் நாலாட்டின்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Related Stories:

>