×

2 எம்எல்ஏக்கள் உட்பட 21 பேர் அறிவிப்பு காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு: குமரி எம்பி இடைத்தேர்தலில் விஜய் வசந்த் போட்டி

சென்னை: சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை கட்சி தலைமை நேற்றிரவு வெளியிட்டது.தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 25 தொகுதிகள் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில், இந்த தொகுதிகளுக்கான வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணியில் காங்கிரஸ் தலைமை மும்முரமாக ஈடுபட்டது.  அதற்குள், வேட்பாளர் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதாக ஆரணி தொகுதி எம்பி விஷ்ணு பிரசாத் சத்தியமூர்த்திபவனில் நேற்று உண்ணாவிர போராட்டம் நடத்தினார். அதேபோன்று, கரூர் எம்பி ஜோதிமணியும் காங்கிரஸ் தலைமையை கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார்.

 இதனால் காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பரபரப்பு நிலவியது. இதற்கிடையே, 25 தொகுதிக்கான வேட்பாளர் பட்டியலை தேர்வு செய்து மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் தலைமையில் தமிழக காங்கிரஸ் குழு நேற்று முன்தினம் டெல்லிக்கு அனுப்பி வைத்தது. இந்த பட்டியலை இறுதி செய்வதற்காக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி தலைமையிலான மத்திய காங்கிரஸ் தேர்தல் குழு நேற்று மாலை கூடியது.அப்போது, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உள்ளிட்ட மூத்த தலைவர்கள் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் வேட்பாளர்கள் பட்டியல் இறுதி செய்யப்பட்டது. அதில் மொத்தம் உள்ள 25 தொகுதிகளில் 4 தொகுதிகளுக்கு மட்டும் இழுபறி நீடிக்கிறது.  இதனால் 21 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் முகுல் வாஸ்னிக் நேற்றிரவு வெளியிட்டார்.அதன் விபரம் வருமாறு:

1. பொன்னேரி (தனி)- துரை சந்திரசேகர்
2. பெரும்புதூர்- செல்வப்பெருந்தகை
3. சோளிங்கர்- ஏ.எம்.முனிரத்தினம்
4. ஊத்தங்கரை(தனி)- ஆறுமுகம்
5. ஓமலூர்- மோகன் குமாரமங்கலம்
6. உதகமண்டலம்- கணேஷ்
7. கோவை தெற்கு- மயூரா ஜெயக்குமார்
8. காரைக்குடி-எஸ்.மாங்குடி
9. மேலூர்- ரவிச்சந்திரன்
10. சிவகாசி- அசோகன்
11.ஸ்ரீ வைகுண்டம்- ஊர்வசி அமிர்தராஜ்
12. கிள்ளியூர்- ராஜேஷ்குமார்
13. ஈரோடு கிழக்கு- திருமகன் ஈ.வே.ரா
14. தென்காசி- பழனிநாடார்
15. அறந்தாங்கி- எஸ்.டி.ராமச்சந்திரன்
16. விருத்தாசலம்-எம்.ஆர்.ஆர்.ராதாகிருஷ்ணன்
17. நாங்குநேரி- ரூபி மனோகரன்
18. கள்ளக்குறிச்சி (தனி)- மணிரத்தினம்
19. திருவில்லிபுத்தூர் (தனி)- மாதவ ராவ்
20. திருவாடனை- ஆர்.எம்.கருமாணிக்கம்
21. உடுமலைப்பேட்டை-தென்னரசு

 உள்ளிட்ட 21 தொதிகளுக்கு மட்டுமே வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர். மீதியுள்ள 4 தொகுதிகளான மயிலாடுதுறை, வேளச்சேரி, குளச்சல், விளவங்கோடு ஆகிய தொகுதிகளுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது. எனவே அதற்கான வேட்பாளர் தேர்வு இன்று காலை நடைபெறும். மேலும், கன்னியாகுமரி மக்களவை தொகுதியில் மறைந்த வசந்தகுமார் எம்பியின் மகன் விஜய் வசந்த்துக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

 இந்த வேட்பாளர் பட்டியலில், சிட்டிங் எம்எல்ஏக்கள் கணேஷ், ராஜேஷ் குமார் ஆகியோருக்கு  வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, ஈவிகேஎஸ்.இளங்கோவன் மகன் திருமகன் ஈ.வே.ரா, தற்போதைய எம்எல்ஏ கே.ஆர்.ராமசாமியின் மகன் ஆர்.எம்.கருமாணிக்கம், மறைந்த எம்எல்ஏ ஊர்வசி செல்வராஜின் மகன் ஊர்வசி அமிர்தராஜ்,  திருநாவுக்கரசர் மகன் ராமச்சந்திரன் ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது  




Tags : Congress ,Vijay Vasant ,Kumari MP , Announcement of 21 persons including 2 MLAs Congress candidates List Release: Vijay Vasant contest in Kumari MP by-election
× RELATED மீனவர்களை கண்டுகொள்ளாத பாஜ ஆட்சியை...