×

பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை சிறப்பு டிஜிபியிடம் சிபிசிஐடி விசாரணை: சஸ்பெண்ட் செய்யப்படுவாரா?

சென்னை: பெண் ஐபிஎஸ் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரம்  தொடர்பாக சிறப்பு டிஜிபியிடம் சிபிசிஐடி அதிகாரிகள் நேற்று காலை அதிரடி  விசாரணை நடத்தினர். இதனால் அவர் சஸ்பெண்ட் செய்யப்படலாம் என்ற பரபரப்பு  எழுந்துள்ளது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் பிரசாரத்துக்கு பாதுகாப்புக்கு சென்ற  பெண் ஐபிஎஸ் அதிகாரியை சிறப்பு டிஜிபி ஒருவர் தனது காரில் ஏறும்படி  கூறியுள்ளார். அதிகாரிதானே என நம்பி ஏறிய சில நிமிடங்களில் அவருக்கு சிறப்பு  டிஜிபி பாலியல் தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். ஒரு கட்டத்தில் முத்தம்  கொடுப்பது போன்ற சில்மிஷங்களில் ஈடுபட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த பெண்  அதிகாரி, காரை நிறுத்தும்படி கூறியுள்ளார். ஆனால் சிறப்பு டிஜிபியின் மிரட்டலால்  டிரைவர் காரை நிறுத்தாமல் சென்று விட்டார். பின்னர் கார் கரூரில் இருந்து  கள்ளக்குறிச்சி வரை சென்றது. கள்ளக்குறிச்சியில் உயர் அதிகாரிகள் அவரை  வரவேற்றனர். அப்போது பெண் அதிகாரி காரில் இருந்து தப்பி தனது காரில் ஏறி  அலுவலகம் புறப்பட்டுச் சென்றார். இந்த விவகாரம் குறித்து, டிஜிபி திரிபாதி,  உள்துறைச் செயலாளர் எஸ்.கே.பிரபாகர் ஆகியோரிடம் புகார் செய்தார். பின்னர்  நேரில் புகார் செய்ய காரில் சென்னை புறப்பட்டார்.

வரும் வழியில் கள்ளக்குறிச்சி எஸ்பி மற்றும் விழுப்புரம் எஸ்பியிடம் எஸ்பியின்  காரை மறித்து தன்னிடம் பேசச் சொல்லும்படி கூறியுள்ளார். ஆனால் அதற்கு இரு  எஸ்பிக்களும் மறுத்து விட்டனர். இதனால் செங்கல்பட்டு எஸ்பியிடம் கூறியுள்ளார்.  செங்கல்பட்டு எஸ்பி கண்ணனோ பெண் ஐபிஎஸ் அதிகாரியின் காரை மறித்து கார்  சாவியை பிடுங்கி, மிரட்டி சிறப்பு டிஜிபியிடம் பேசும்படி கூறியுள்ளார். இதை  தொடர்ந்து சென்னை வந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி, டிஜிபி திரிபாதி, உள்துறைச்  செயலாளர் எஸ்.கே.பிரபாகரிடம் புகார் செய்தார். தமிழக அரசு இந்த புகாரை  ரகசியமாக வைத்திருந்தது. பின்னர் இந்த தகவல் வெளியானதை தொடர்ந்து சிறப்பு  டிஜிபி அதிரடியாக மாற்றப்பட்டார். செங்கல்பட்டு எஸ்பி கண்ணனும் சஸ்பெண்ட்  செய்யப்பட்டார். இந்நிலையில், சிறப்பு டிஜிபி மீதான புகாரை சிபிஐக்கு மாற்றக்கோரி  சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை சென்னை உயர் நீதிமன்றமும் தானாக முன் வந்து விசாரிக்க  தொடங்கியது. அதில் பெண் ஐபிஎஸ் அதிகாரியை தடுத்த எஸ்பி மீது நடவடிக்கை  எடுக்கப்பட்டுள்ளது. ஏன், பாலியல் குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரி மீது  நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்று நீதிமன்றம் நேற்று எச்சரித்தது. நீதிமன்றம்  எச்சரிக்கையை தொடர்ந்து, சிபிசிஐடி போலீசார் திடீர் சுறுசுறுப்பு காட்டத்  தொடங்கியுள்ளனர். அதன் ஒருகட்டமாக, சிறப்பு டிஜிபிக்கு சிபிசிஐடி போலீசார்  சம்மன் கொடுத்தனர். இதனால் நேற்று காலை 11 மணிக்கு எழும்பூரில் உள்ள  சிபிசிஐடி எஸ்பி முத்தரசி முன்பு சிறப்பு டிஜிபி ஆஜரானார். அப்போது, அவரிடம்  பெண் ஐபிஎஸ் அதிகாரி கொடுத்த புகாரில் உள்ள குற்றச்சாட்டு குறித்து துருவி  துருவி விசாரணை நடத்தினர். ஒரு சிறப்பு டிஜிபியிடம் சிபிசிஐடி போலீசார்  விசாரணை நடத்தியுள்ளது போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை  ஏற்படுத்தியுள்ளது. ஆனால், இதுவரை சிறப்பு டிஜிபி சஸ்பெண்ட் செய்யப்படவில்லை.  சிபிசிஐடி விசாரணையை தொடர்ந்து அவர் சஸ்பெண்ட் செய்யப்படுவார் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.

காப்பாற்றப்படும் எஸ்பி குணசேகரன்
சிறப்பு டிஜிபி உத்தரவின்பேரில் தற்போது மதுவிலக்குப் பிரிவு சேலம் எஸ்பியாக  இருக்கும் குணசேகரன், பெண் ஐபிஎஸ் அதிகாரியின் மாமனாருடன் போனில்  பேசியுள்ளார். அவரை மிரட்டி, புகாரை வாபஸ் வாங்கும்படி எச்சரித்துள்ளார்.  இதுகுறித்தும் தனது புகாரில் பெண் ஐபிஎஸ் அதிகாரி தெரிவித்துள்ளார். ஆனால்  சிபிசிஐடி போலீசார், மதுவிலக்கு எஸ்பியின் போன் எண்ணை மட்டுமே எப்ஐஆரில்  பதிவு செய்துள்ளனர். குணசேகரனின் பெயரை சேர்க்கவில்லை. குணசேகரன் மீது  ஏற்கனவே பல பாலியல் குற்றச்சாட்டுகள் உள்ளன. அவர் ஈரோட்டில் கூடுதல்  எஸ்பியாக பணியாற்றியபோது, பெண் விவகாரத்தில் சிக்கித்தான் பணி மாற்றம்  செய்யப்பட்டார். இப்போது, சிறப்பு டிஜிபிக்காக பெண் அதிகாரியையே மிரட்டியுள்ளார்.  இவர் கோவையில் தலைமையிட துணை கமிஷனராக இருந்தார். சேலத்தில்  முதல்வருக்கு தேர்தல் பணியாற்ற வேண்டும் என்பதற்காக சேலம் மதுவிலக்குப்  பிரிவுக்கு மாறுதலாகி வந்துள்ளார். இதனால்தான் அவரை தமிழக அதிகாரிகள்  சஸ்பெண்ட் செய்யவில்லை. அவரை காப்பாற்ற அரசு முயற்சிப்பதாக கூறப்படுகிறது.



Tags : CBCID ,IPS ,DGP , CBCID probe into sexual harassment of female IPS officer by Special DGP: Will she be suspended?
× RELATED முன்னாள் சிறப்பு டிஜிபி ராஜேஷ் தாஸ்...