கேப்டன் வில்லியம்ஸ் அபார சதம் இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது ஜிம்பாப்வே

அபுதாபி: ஆப்கானிஸ்தான் அணியுடனான 2வது டெஸ்டில், கேப்டன் ஷான் வில்லியம்ஸ் - டொனால்டு திரிபானோ ஜோடியின் அபார ஆட்டத்தால் ஜிம்பாப்வே அணி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது.ஷேக் சையத் ஸ்டேடியத்தில் நடந்து வரும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த ஆப்கானிஸ்தான் முதல் இன்னிங்சில் 4 விக்கெட் இழப்புக்கு 545 ரன் குவித்து டிக்ளேர் செய்தது. இப்ராகிம் ஸத்ரன் 72, ஹஷ்மதுல்லா 200*, அஸ்கர் ஆப்கன் 164, ஜமால் 55* ரன் விளாசினர். அடுத்து களமிறங்கிய ஜிம்பாப்வே முதல் இன்னிங்சில் 287 ரன் குவித்து ஆல் அவுட்டானது. 258 ரன் பின்தங்கிய நிலையில் பாலோ ஆன் பெற்ற ஜிம்பாப்வே, 3ம் நாள் ஆட்ட முடிவில் விக்கெட் இழப்பின்றி 24 ரன் எடுத்திருந்தது.

பிரின்ஸ் 3, கெவின் 20 ரன்னுடன் நேற்று ஆட்டத்தை தொடர்ந்தனர். பிரின்ஸ் 15, கெவின் 30, முசகண்டா 15 ரன்னில் வெளியேற, சிக்கந்தர் 22 ரன் எடுத்தார். வெஸ்லி, ரயன் பர்ல், சகாப்வா ஆகியோர் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தனர். ஜிம்பாப்வே 63.2 ஓவரில் 142 ரன்னுக்கு 7 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், வில்லியம்ஸ் - டொனால்டு ஜோடி 8வது விக்கெட்டுக்கு கடுமையாகப் போராடி இன்னிங்ஸ் தோல்வியை தவிர்த்தது. 4ம் நாள் ஆட்ட முடிவில் ஜிம்பாப்வே 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன் எடுத்துள்ளது. வில்லியம்ஸ் 106 ரன் (190 பந்து, 9 பவுண்டரி, 1 சிக்சர்), டொனால்டு 63 ரன்னுடன் (164 பந்து, 11 பவுண்டரி) களத்தில் உள்ளனர். கை வசம் 3 விக்கெட் இருக்க, ஜிம்பாப்வே 8 ரன் முன்னிலை பெற்றுள்ள நிலையில் இன்று கடைசி நாள் ஆட்டம் நடக்கிறது.

Related Stories: