×

ஐகோர்ட் கிளையில் வழக்கு விசாரணை கோயில் சமையலர் பணிக்கு குறிப்பிட்ட சமூகத்தினர் நியமன அறிவிப்பு ரத்து: அறநிலையத்துறை தரப்பில் தகவல்

மதுரை:  கோயில் சமையலர் பணிக்கு குறிப்பிட்ட சமூகத்தினரே இருக்க வேண்டும் என்ற அறிவிப்பை  திரும்ப பெற்றதாக ஐகோர்ட் கிளையில் அறநிலையத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது. திருவண்ணாமலையைச் ேசர்ந்த ரங்கநாதன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு: அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற தமிழக அரசின் திட்டத்தில் பயிற்சி முடித்த பிராமணர் அல்லாத 200க்கும் மேற்பட்டோருக்கு கடந்த 14 ஆண்டுகளாக பணி வழங்கப்படவில்லை. இந்நிலையில் இந்து அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் திருச்சி மலைக்கோட்டை தாயுமானசுவாமி கோயிலில் காலியாகவுள்ள சமையலர், பரிச்சாகர், நைவேத்தியம் மற்றும் உதவி சமையலர், உதவி பரிச்சாகர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியானது.

இதில், சமையலர் மற்றும் பரிச்சாகர் பணிக்கு நிர்ணயிக்கப்பட்ட தகுதிகளுடன் பிராமணராக இருக்க வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இது கடவுளுக்கான பணியில் ஈடுபடுவோரிடம் பாகுபாடு காட்டுவதைப் போல உள்ளது. இது அரசியலமைப்பு சட்டத்திற்கும் எதிரானது. எனவே, காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பிற்கு தடை விதிக்க வேண்டும். அறிவிப்பு சட்ட விரோதம் என்பதால் அதை ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறியிருந்தார். இந்த மனுவை தலைமை நீதிபதி சஞ்சிப் பானர்ஜி, நீதிபதி ஆர்.ஹேமலதா ஆகியோர் விசாரித்தனர். அறநிலையத்துறை வக்கீல் நாராயணகுமார் ஆஜராகி, ‘‘மனுதாரர் குறிப்பிடும் அறிவிப்பாணை உடனடியாக திரும்ப பெறப்பட்டது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், அறிவிப்பு திரும்ப பெறப்பட்டதால் மனுவை தள்ளுபடி ெசய்து உத்தரவிட்டனர்.



Tags : Icord Branch ,Treasury , Case trial at iCourt branch
× RELATED ராசிபுரம் அருகே ரூ.7 கோடி மதிப்பிலான...