×

வீரபாண்டி அதிமுக வேட்பாளரை விரட்டியடித்த சிட்டிங் எம்.எல்.ஏ: ‘நீ எப்படி ஜெயிக்கிற பார்க்கிறேன்’ என ஆவேசம்

சேலத்தில் ஆசி பெறச் சென்ற வீரபாண்டி அதிமுக வேட்பாளரை விரட்டியடித்த  சிட்டிங் எம்எல்ஏவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சேலம் மாவட்டம் வீரபாண்டி தொகுதி  அதிமுக வேட்பாளராக ராஜா (எ) ராஜமுத்து அறிவிக்கப்பட்டுள்ளார். இவர்  பனமரத்துப்பட்டி மேற்கு ஒன்றிய எம்ஜிஆர் மன்ற செயலாளராக இருந்து வருகிறார்.  வீரபாண்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும், சேலம் மத்திய கூட்டுறவு  வங்கி தலைவர் இளங்கோவனை சந்தித்து அவர் வாழ்த்து பெற்றார். பின்னர்  தொகுதியில் உள்ள மூத்த நிர்வாகிகளை சந்தித்து வாழ்த்து பெற்று வருகிறார்.  அதன்படி தற்போது எம்எல்ஏவாக இருக்கும் வீரபாண்டி மனோன்மணியை சந்தித்து  வாழ்த்து பெற சென்றார். அவருடன் ஒன்றிய செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளும்  உடன் சென்றனர். வேட்பாளரை பார்த்ததும் மனோன்மணி எம்எல்ஏ கடும் கோபம்  அடைந்தார். ‘‘யாரை கேட்டு இங்கே வந்தீங்க. எனது அப்பாவும், அண்ணனும்  உயிரைக் கொடுத்து அதிமுக என்ற கட்சியை வளர்த்தனர். கட்சிக்காக நீ என்ன  செய்தாய்? எப்படி சீட் வாங்கிவிட்டு வந்தாய்? எப்படி வெற்றி பெறுவாய் என்று நான்  பார்க்கிறேன்’’ என ஆவேசமாக பேசியுள்ளார்.

அதேபோல் அருகில் இருந்த நிர்வாகிகளை பார்த்த எம்எல்ஏ, ‘‘கூட இருந்தே  குழிபறிச்சிருக்கீங்க. நல்லவர்கள் போல நடிச்சிருக்கீங்க,’’ என கடுமையான  வார்த்தைகளை வீசியுள்ளார். இதனை சற்றும் எதிர்பார்க்காக வேட்பாளர் ராஜமுத்து  மற்றும் நிர்வாகிகள் கடும் அதிர்ச்சியடைந்தனர். பின்னர் அவர்கள் வேதனையுடன்  திரும்பிச் சென்றனர். இதுகுறித்து முதல்வரின் கவனத்திற்கும் கொண்டு  சென்றுள்ளனர். இது குறித்து வேட்பாளர் ராஜமுத்து கூறுகையில், ‘கடுமையான  வார்த்தையால் பேசினார். இதை எதிர்பார்க்கல’ என்று விரக்தியுடன் கூறினார்.  வேட்பாளரையே எம்எல்ஏ விரட்டியடித்த தகவல் தொகுதி முழுவதும் காட்டுத்தீயாய்  பரவியுள்ளது.

Tags : MLA ,Veerapandi ,AIADMK , Sitting MLA who chased away Veerapandi AIADMK candidate: 'I see how you are winning'
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...