×

இங்கிலாந்துடன் இன்று 2வது டி20 பதிலடி கொடுக்குமா இந்தியா?: கோஹ்லிக்கு நெருக்கடி

அகமதாபாத்:  இந்தியா - இங்கிலாந்து அணிகள் மோதும் 2வது டி20 போட்டி, அகமதாபாத் மோடி ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு தொடங்குகிறது.டெஸ்ட் தொடரில் இந்தியா ஆதிக்கம் செலுத்திய நிலையில், அடுத்து இரு அணிகளும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பலப்பரீட்சையில் இறங்கியுள்ளன. அகமதாபாத்தில் நேற்று முன்தினம் நடந்த முதல் டி20 போட்டியில், 8 விக்கெட் வித்தியாசத்தில் அபாரமாக வென்ற இங்கிலாந்து அணி 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில், 2வது போட்டி அதே மைதானத்தில் இன்று இரவு நடக்கிறது.

சென்னையில் நடந்த முதல் டெஸ்டில் படுதோல்வி அடைந்த இந்தியா, அதன் பிறகு சுதாரித்துக்கொண்டு சிறப்பாக விளையாடி ஹாட்ரிக் வெற்றியுடன் தொடரைக் கைப்பற்றி மரண அடி கொடுத்ததுடன் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கும் முன்னேறியது. அதே போல, டி20 தொடரிலும் இங்கிலாந்து அணிக்கு பதிலடி கொடுக்குமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது.முதல் டி20ல் தவான் (4), ராகுல் (1), கேப்டன் கோஹ்லி (0) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தது தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. பொறுப்புடன் விளையாடிய ஷ்ரேயாஸ் அரை சதம் அடித்தது கவுரவமான ஸ்கோரை எட்ட உதவியது. பன்ட், ஹர்திக் ஓரளவு தாக்குப்பிடித்தாலும் பெரிய ஸ்கோர் அடிக்கத் தவறினர். பந்துவீச்சும் அவ்வளவாக எடுபடவில்லை. அதே சமயம் இங்கிலாந்து அனைத்து வகையிலும் சிறப்பாக விளையாடி அசத்தியது. பவுலர்கள் அபாரமாக செயல்பட்டு இந்திய அணியின் குவிப்பை கட்டுப்படுத்திய நிலையில், முன்னணி வீரர்கள் கணிசமாக ரன் குவித்து வெற்றிக்கு உதவினர். இதனால் இங்கிலாந்து அணி மிகுந்த உற்சாகத்துடன் 2வது போட்டியை எதிர்கொள்கிறது.

டெஸ்ட் தொடரையும் சேர்த்து கடைசியாக விளையாடிய 5 இன்னிங்சில் 3 முறை டக் அவுட்டாகி இருப்பது, கேப்டன் கோஹ்லி மீதான நெருக்கடியை அதிகரித்துள்ளது. அவர் உட்பட முன்னணி பேட்ஸ்மேன்கள் கணிசமாக ரன் குவித்தால் மட்டுமே இங்கிலாந்து அணிக்கு சவால் விடுக்க முடியும். முதல் போட்டியில் அதிரடி தொடக்க வீரர் ரோகித் ஷர்மாவுக்கு ஓய்வளித்ததும் கடுமையான விமர்சனத்துக்குள்ளாகி இருக்கிறது. வீரர்கள் தேர்வில் இந்திய அணி நிர்வாகம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டியது அவசியம். முன்னிலையை அதிகரிக்க இங்கிலாந்தும், பதிலடி கொடுக்க இந்தியாவும் வரிந்துகட்டுவதால் இன்றைய ஆட்டம் மிகவும் சுவாரசியமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

இந்தியா: விராத் கோஹ்லி (கேப்டன்), ரோகித் ஷர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், ஷிகர் தவான், ஷ்ரேயாஸ் அய்யர், சூரியகுமார் யாதவ், ரிஷப் பன்ட் (விக்கெட் கீப்பர்), ஹர்திக் பாண்டியா, யஜ்வேந்திர சாஹல், புவனேஷ்வர் குமார், அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், நவ்தீப் சைனி, தீபக் சாஹர், ராகுல் திவாதியா, இஷான் கிஷண் (ரிசர்வ் கீப்பர்).இங்கிலாந்து: இயான் மோர்கன் (கேப்டன்), ஜோஸ் பட்லர், ஜேசன் ராய், லயம் லிவிங்ஸ்டோன், டேவிட் மாலன், பென் ஸ்டோக்ஸ், மொயீன் அலி, அடில் ரஷித், ரீஸ் டாப்லி, கிறிஸ் ஜார்டன், மார்க் வுட், சாம் கரன், டாம் கரன், சாம் பில்லிங்ஸ், ஜானி பேர்ஸ்டோ, ஜோப்ரா ஆர்ச்சர்.

Tags : India ,England ,Kohli , 2nd T20 with England today Will India retaliate ?: Crisis for Kohli
× RELATED ஐதராபாத் – பெங்களூரு அணிகள் இடையே...