தமிழகத்தில் தொடரும் பட்டாசு ஆலை விபத்து; விருதுநகர் அருகே மீண்டும் ஆலையில் வெடி விபத்து: ஒருவர் உயிரிழப்பு, 3 பேருக்கு தீவிர சிகிச்சை..!

விருதுநகர்: விருதுநகர் அருகே குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் தற்போது மீண்டும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் வெடிபொருள் கட்டுப்பாட்டுத் துறையின் உரிமம் பெற்ற பட்டாசு ஆலைகள் சுமார் 800-க்கு மேல் உள்ளன. சமீபகாலமாக விருதுநகர் மாவட்டத்தில் உள்ள பட்டாசு தொழிற்சாலைகளில் தொடர் விபத்து ஏற்பட்டு வருகிறது. கடந்த பிப்ரவரி மாதத்தில் விருதுநகர் மாவட்டத்தில் அடுத்தடுத்து 4 பட்டாசு ஆலைகளில் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் பலர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த மாதம் 12ம் தேதி சாத்தூர் அருகே அச்சங்குளத்தில் ஏற்பட்ட பட்டாசு ஆலை விபத்தில் 25 பேர் உயிரிழந்திருந்தனர். இதன் தொடர்ச்சியாக பட்டாசு ஆலைகளில் ஆய்வுகளை மேற்கொள்ள வட்டாட்ச்சியர்கள் தலைமையிலான 7 குழுக்கள் அமைக்கப்பட்டது. இந்த ஆய்வுகளையடுத்து சிவகாசியையொட்டியுள்ள பகுதியில் 11 பட்டாசு ஆலைகளுக்கு சீல் வைக்கப்பட்டது. இந்நிலையில் விருதுநகர் அருகே குருமூர்த்தி நாயக்கன்பட்டியில் தற்போது மீண்டும் ஒரு பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.

குருமூர்த்திநாயக்கன்பட்டியில் வாசுதேவன்என்பவருக்கு சொந்தமான துர்கா பட்டாசு ஆலையில் வழக்கம் போல், கம்பி மத்தாப்பு தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர்‍. அப்போது மருந்துகள் தடவிய குச்சுகளை தரையில் கொட்டும் போது திடீரென தீப்பற்றியது. அறை முழுவதும் மளமளவென பரவிய தீ, கொளுந்து விட்டு எரிந்தது. தீ விபத்தில் அங்கு பணியாற்றிக்கொண்டிருந்த உள்ளூர்வாசிகளான பெண் உள்ளிட்ட 4 பேர் படுகாயமடைந்ததாக முதற்கட்ட தகவல் வெளியாகியது. படுகாயமடைந்த அவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் விபத்தில் காயமடைந்தவர்களில் ஒருவர் உயிரிழந்தார். படுகாயமடைந்த தொழிலாளி ராஜா சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மாடுகாயமடைந்த மேலும் 3 தொழிலாளர்களுக்கு சிவகாசி மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Related Stories:

>