மாசி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் கடலில் பக்தர்கள் புனித நீராடல்

ராமேஸ்வரம்: மாசி அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் இன்று ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். மாசி மாத சர்வ அமாவசையான இன்று காலை ராமேஸ்வரம் அக்னிதீர்த்த கடலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். இதையொட்டி இன்று அதிகாலை முதல் அக்னிதீர்த்த கடற்கரையில் குவிந்த வெளியூர் பக்தர்கள் சூரிய உதயத்திற்குப்பின் தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் செய்து திதி கொடுத்து முன்னோர்களை வழிபட்டனர். தொடர்ந்து கோயிலுக்குள் உள்ள 22 தீர்த்தங்களிலும் நீராடி நீண்டவரிசையில் காத்திருந்து சுவாமி, அம்பாளை தரிசனம் செய்தனர்.

அமாவாசையை முன்னிட்டு இன்று அதிகாலை 4 மணிக்கு கோயில் நடை திறந்து 5 மணிக்கு ஸ்படிலிங்க பூஜையும், பின் கால பூஜைகளும் நடைபெற்றன. காலை 9 மணிக்கு ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்பாள் இந்திர விமானத்தில் எழுந்தருளி ரதவீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து மதியம் 1 மணிக்கு சுவாமி, அம்பாள் தங்க ரிஷப வாகனத்தில் அக்னிதீர்த்த கடற்கரை மண்டகப்படிக்கு எழுந்தருள தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது.

அதிகாலை 5 மணி முதல் கோயிலுக்குள் பக்தர்கள் தீர்த்தமாட கோயில் நிர்வாகத்தினால் அனுமதிக்கப்பட்டதை தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் வடக்கு கோபுரம் பகுதியில் நீண்ட வரிசையில் காத்திருந்து புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனர். மாலை 6 மணிக்கு மேல் அக்னிதீர்த்த கடற்கரையில் சிறப்பு தீபாராதனை நடைபெற்று சுவாமி, அம்பாள் தங்க ரிஷப வாகனங்களில் கோயிலுக்கு எழுந்தருளல் நடைபெறுகிறது.

Related Stories:

>