×

நர்சிங் படிப்புக்கும் நீட் தேர்வு சமூகநீதிக்கு எதிரானது! : எம்.எச்.ஜவாஹிருல்லா கண்டனம்!!

சென்னை : மனிதநேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச்.ஜவாஹிருல்லா வெளியிடும் அறிக்கை:

புதிய கல்விக் கொள்கை என்ற பெயரிலும், மாணவர்களின் திறன் மேம்பாடு என்ற போர்வையிலும் பள்ளிக்கல்வி முதல் பல்கலைக்கல்வி வரை அனைத்துமட்ட கல்வியிலும் சமூகநீதிக்கு எதிராக, ஏழை எளிய மக்கள் கல்வியறிவு பெறுவதைத் தடுக்கும் செயல்திட்டத்தை படிப்படியாக செயல்படுத்தி வரும் மத்திய பாஜக அரசு, விளிம்புநிலை மக்கள் பெருமளவில் பயிலும் நர்சிங்(செவிலியர்) படிப்புக்கும் இனி நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருப்பது மத்திய அரசுக்கு மனசாட்சியும் இல்லை, பாஜகவுக்கு பரந்த மனப்பான்மையும் இல்லை என்பதையே காட்டுகிறது.

எம்.பி.பி.எஸ்., எம்.டி., எம்.எஸ்., பி.டி.எஸ்., எம்.டி.எஸ்., ஆகிய மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு எனும் அரக்கனைத் திணித்து பலநூறு ஏழை மாணவர்களின் எதிர்கால டாக்டர் கனவுகளை சிதைத்தும் “பிறரைத் துன்புறுத்தி இன்பம் காணுதல்” எனும் சேடிஸ்ட் தனத்தை அரங்கேற்றி ரசித்துக் கொண்டிருக்கும் மத்திய மோடி அரசு, தற்போது பி.எஸ்.சி. நர்சிங்., பி.எஸ்.சி. லைஃப் சயின்ஸ் ஆகிய செவிலியர் பணிகளுக்கான படிப்புகளுக்கும் இந்த 2021ஆம் ஆண்டு முதல் நீட் தேர்வு நடத்தப்படும் என்று அறிவித்திருப்பது நயவஞ்சகத்தனத்தின் உச்ச கட்டமாகும்.

உயிர்காக்கும் மருத்துவ சேவைகளில் முன்களப் பணியாளர்களில் முதன்மையானவர்கள் செவிலியர் தான். நாட்டில் உள்ள செவிலியர்களில் பெரும்பான்மையோர், ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மை சமுதாயங்களைச் சார்ந்தோர் என்பதையும், நர்சிங் கல்வி பயில்வதிலும் பெரும்பான்மையோர் இந்த சமுதாயங்களைச் சேர்ந்த அடித்தட்டு மக்களின் வாரிசுகள் என்பதையும் நன்கறிந்த பாஜக அரசு, இந்த விஷம் கக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அத்துடன், சித்தா, ஆயுர்வேதம், யுனானி, ஹோமியோபதி மருத்துவப் படிப்புகளுக்கும் இனி நீட் தேர்வு என்ற அறிவிப்பும், உயர்சாதியினர் என்று சொல்லப்படும் சொற்ப அளவில் உள்ள இனத்தினர் மற்றும் பெரும் செல்வந்தவர்களின் குழந்தைகள் மட்டுமே இனி டாக்டர்களாக ஆக முடியும் என்பதை மறைமுகமாக தெரிவிப்பது போன்று உள்ளது.

நர்சிங் உட்பட பி.ஏ., பி.எஸ்.சி., போன்ற இளங்கலை படிப்புகளுக்கும் நீட் தேர்வு என்ற அறிவிப்பை மத்திய அரசு உடனடியாக வாபஸ் பெறவேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி வலியுறுத்துகிறது.

Tags : M. H. Jawahrilla , Nursing Studies, NEED EXAMINATION, SOCIAL JUSTICE, M.H.
× RELATED மஞ்சம்பாக்கம் சந்திப்பு அருகே...