×

சென்னை - கொல்லம் ரயிலில் ரூ1.22 கோடி பறிமுதல்: 3 பேரிடம் விசாரணை

செங்கோட்டை: சென்னை - கொல்லம் ரயிலில் கொண்டு செல்லப்பட்ட ரூ.1.22 கோடியை ரயில்வே போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக மதுரையைச் சேர்ந்த 3 பேரிடம் விசாரணை நடக்கிறது. கேரளாவில் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதையடுத்து கேரள - தமிழ்நாடு எல்லை ஆரியங்காவு பகுதியில் கேரள போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் பணம், ஆல்கஹால், போதைப்பொருள், ஆயுதங்கள் மற்றும் வெடிபொருட்கள் கடத்தலைத் தடுக்க வாகனங்களில் மோப்ப நாய் உதவியுடன் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.

தற்போது ரயில்வே போலீசாரும் ரயில்களில் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் நேற்று  ரயில்வே போலீசார் தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு செல்லும் சென்னை - கொல்லம் விரைவு ரயிலில் தென்மலை பகுதியில் வைத்து சோதனை மேற்கொண்டனர். அப்போது 3 பேர் பேக்குகளில் கட்டுக்கட்டாக 2000 ரூபாய் நோட்டு 500 ரூபாய் நோட்டுக்கள் என ஒரு கோடியே 22 லட்ச ரூபாய் பணத்தை வைத்திருப்பது தெரியவந்தது. அவர்களிடம் பணம் கொண்டு செல்வதற்கான உரிய ஆவணங்கள் இல்லை. ரயில்வே போலீசாரின் விசாரணையில் அவர்கள் மதுரையை சேர்ந்த சதீஸ்குமார் (35), ராஜீவ் காந்தி (33),

தியாகராஜன் (63) என்பதும் இவர்கள் இந்த பணத்தை கேரளாவில் உள்ள செங்கனூர் பகுதியை சேர்ந்த ஜூவல்லரிக்கு கொண்டு செல்வதாகவும் தெரிவித்தனர். பணத்தை பறிமுதல் செய்த ரயில்வே போலீசார், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கும், போலீசாருக்கும் தகவல் தெரிவித்தனர். அவர்கள் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Chennai ,Colum , 1.22 crore seized on Chennai-Kollam train: Investigation on 3 persons
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...