திருவொற்றியூரில் பரபரப்பு: டெபாசிட் தொகையை திரும்ப கேட்டு சுயேட்சை வேட்பாளர் தர்ணா

திருவொற்றியூர்: திருவொற்றியூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட ஆன்லைனில் கட்டிய டெபாசிட் பணத்தை திரும்ப கேட்டு சுயேட்சை வேட்பாளர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு நிலவியது. சென்னை திருவொற்றியூர் சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் மறைந்த அமைச்சர் கே.பி.பி.சாமியின் சகோதரர் கே.பி.சங்கரும், அதிமுக சார்பில் முன்னாள் எம்எல்ஏ கே.குப்பனும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் போட்டியிடுகின்றனர். தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் தேர்தல் நடத்தும் அலுவலரிடம் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.

இந்நிலையில், நேற்று மதியம் ஜாகிர் உசேன் (47) என்பவர் திருவொற்றியூர் தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட, தேர்தல் அதிகாரி தேவேந்திரனிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். முன்னதாக, அவர் ஆன்லைன் மூலமாக டெபாசிட் தொகை ₹10 ஆயிரத்தை செலுத்திய ரசீதையும் வேட்புமனுவுடன் இணைத்து கொடுத்தார். வேட்புமனுவை பெற்ற தேர்தல் அதிகாரி தேவேந்திரன், நீங்கள் ஆன்லைன் மூலம் செலுத்திய டெபாசிட் தொகை அரசு கணக்கில் வரவில்லை. அதனால் நீங்கள் ரொக்கமாக ₹10 ஆயிரம் டெபாசிட் தொகை செலுத்தினால் தான் வேட்பு மனுவை ஏற்றுக்கொள்வேன் என கூறியதாக தெரிகிறது.

இதைத்தொடர்ந்து, ரொக்கமாக ₹10 ஆயிரத்தை செலுத்தி, ஜாகிர் உசேன் வேட்புமனு தாக்கல் செய்தார். சிறிது நேரத்தில், இவரது செல்போனில் ஆன்லைன் மூலம் செலுத்திய டெபாசிட் தொகை அரசு கணக்குக்கு சென்றுவிட்டதாக குறுஞ்செய்தி வந்தது. இதைத் தொடர்ந்து, தேர்தல் அதிகாரியை ஜாகிர் உசேன் சந்தித்து, தான் ரொக்கமாக செலுத்திய தொகையைத் திரும்ப தரும்படி வலியுறுத்தியிருக்கிறார். அதற்கு தேர்தல் நடத்தும் அலுவலர், வேட்புமனு தாக்கல் செய்த நேரம் முடிந்துவிட்டது. தாங்கள் செலுத்திய ₹10 ஆயிரம் டெபாசிட் தொகையை கருவூலத்துக்கு அனுப்பிவிட்டோம். நீங்கள் கருவூலத்தில் மனு செய்து பணத்தை பெற்றுக் கொள்ளுங்கள் எனக் கூறியுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த ஜாகிர் உசேன், தனது பணத்தை திருப்பிக் கொடுக்கும்படி தேர்தல் நடத்தும் அலுவலரின் அலுவலக வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதையடுத்து ஜாகிர் உசேனுடன் தேர்தல் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அவரிடம் ரொக்கமாக செலுத்திய டெபாசிட் தொகையைத் திரும்ப கிடைக்க உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இதை ஏற்று தர்ணா போராட்டத்தை கைவிட்டு ஜாகிர் உசேன் கிளம்பி சென்றனார்.

Related Stories: