72 மாவட்ட தலைவர்களில் 10 பேருக்கு வாய்ப்பு தந்திருக்கலாம்; பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே ‘சீட்’: பொன்னம்மாள் பேத்தி ஜான்சி ராணி திடீர் புகார்

சென்னை: வெற்றி வாய்ப்புள்ள நிலக்கோட்டை தொகுதியை காங்கிரஸ் ஏன் கேட்டு வாங்கவில்லை என்றும், பணம் இருப்பவர்களுக்கு மட்டுமே சீட் கொடுக்கிறார்கள் என்றும் தமிழக காங்கிரஸ் தலைமை மீது மூத்த தலைவர் பொன்னம்மாளின் பேத்தி ஜான்சி ராணி புகார் தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மகளிரணி தலைவியும் மூத்த தலைவர் பொன்னம்மாளின் பேத்தியுமான ஜான்சி ராணி நிருபர்களிடம் கூறிதாவது: நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் எனக்கான வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது. மறைந்த பொன்னம்மாளின் பேத்தி நான். 80 ஆண்டுகளாக பாரம்பரிய காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

அந்த குடும்பத்தில் இருந்து வந்த நான், இன்று உழைக்காமல் நான் எதையும் கேட்கவில்லை. மகளிரணி தலைவியாக இருந்த போது, அதிக பெண்களை கட்சியில் இணைத்தேன். காங்கிரஸ் கட்சிக்காக அதிகமாக உழைத்திருக்கிறேன். அந்த அடிப்படையில் இந்த தேர்தலில் மட்டுமல்ல 2016ல் நடந்த சட்டமன்ற தேர்தலின் போதே தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கேட்டேன். அப்போது எனது எனது பாட்டி இறந்த சமயம். அப்போது தந்திருந்தால் கூட அந்த அலையில் வெற்றி வாய்ப்பு நிலக்கோட்டை தொகுதிக்கு இருந்தது. திமுக அந்த தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்க தயராக இருந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில் ஏன் அந்த தொகுதியை காங்கிரஸ் தலைமை கேட்கவில்லை.

அது தான் எனது கேள்வி?. ராகுல்காந்தி கடுமையாக உழைக்கிறார். அவர் பிரதமராக வர நாங்களும் கடுமையாக உழைக்கிறோம். எங்களை போன்ற தொண்டர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்படுகிறது. 20 பேருக்காக 20 லட்சம் தொண்டர்களை காங்கிரஸ் தலைமை பழி வாங்குகிறது. பதவிகளிலும், தேர்தல்களிலும் உழைக்கிறவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்படுகிறது. பணம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் காங்கிரஸ் கட்சியில் வாய்ப்பு கிடைக்கும் என்றால், இதற்கு நான் என்ன சொல்வதென்று தெரியவில்லை. 100 சதவீதம் வெற்றி வாய்ப்புள்ள நிலக்கோட்டை தொகுதியை காங்கிரஸ் தலைமை ஏன் கேட்டு வாங்கவில்லை. இதுகுறித்து ராகுல்காந்திக்கு டிவிட் போட்டிருக்கிறேன்.

அவரிடம் இருந்து பதில் வரும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். பணம் இருப்பவர்களுக்கு மட்டும் தான் சீட் கொடுத்திருக்கிறார்கள் என்பது எனக்கு தெரியும். வேட்பாளர்கள் பட்டியல் வெளியாகும் போது பாருங்கள். ஆட்களை தேர்வு செய்து தான் தொகுதிகளை வாங்குகிறார்கள். அப்படி என்றால் உழைக்கிறவர்களுக்கு என்ன இருக்கிறது. பணக்காரர்களுக்கு மட்டும் தான் சீட் கொடுப்பார்கள் என்றால் அவர்களை மட்டுமே கட்சியில் வைத்துக் கொள்ள வேண்டும். ஏழைகளை வைத்திருக்கக்கூடாது. 25 தொகுதிகளில் உழைப்பவர்களுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்டுள்ளது. 72 மாவட்ட தலைவர்கள் இருக்கிறார்கள். அதில் உழைக்கக்கூடிய 10 பேரை தேர்ந்தெடுத்து வாய்ப்பு ெகாடுத்திருக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories:

>