மக்களின் எதிர்பார்ப்புகளை எதிரொலிக்கும் திமுக தேர்தல் அறிக்கையை வரவேற்கிறோம் : முத்தரசன்

சென்னை : இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களுக்கு விடுத்துள்ள செய்தி அறிக்கை.

மக்களின் எதிர்பார்ப்புகளை எதிரொலிக்கும் திமுக தேர்தல் அறிக்கையை வரவேற்கிறோம்:

திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் (2021) அறிக்கை வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளை பிரதிபலித்துள்ள தேர்தல் அறிக்கை, அவைகளை நிறைவேற்றித் தர உறுதியளித்துள்ளது. கொரோனா நோய் தாக்குதல் நெருக்கடி காலத்தை சமாளிக்க ரொக்கப் பண உதவி கேட்டு கதறிய மக்களை எடப்பாடி அரசு ஏமாற்றி விட்டது. திமுகழக ஆட்சி அமைத்தவுடன் குடும்பத்திற்கு தலா நான்காயிரம் (ரூ.4000) ரூபாய் உதவி செய்யும் என உறுதியளிக்கப்பட்டுள்ளது. பாஜக மத்திய அரசு நாள்தோறும்  பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகளை உயர்த்தி குடும்பச் செலவுச் சுமையை ஏற்றி வரும் சூழலில், அதனைத் தடுத்து சமாளிக்க பெட்ரோல் லிட்டருக்கு ரூ.5/-ம், டீசல் லிட்டருக்கு ரூ4/-ம், சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.100/- நிதியுதவி வழங்க உறுதியளித்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

பள்ளி மாணவர்களுக்கு பால் வழங்குவதும், வேலைவாய்ப்புத் துறையை திறன் வளர்ப்பு துறையாக மாற்றுவதும் மனித வளத்தை மேம்படுத்தும். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை வழங்க வேண்டும் என கோரி வரும் சூழலில் அதனை 150 நாட்களாக உயர்த்தி தேர்தல் அறிக்கை உறுதியளித்துள்ளது. இது கிராமப்புற தொழிலாளர்களின் ஆதரவைப் பெறும். 5 சவரன் வரை நகைக்கடன்கள் தள்ளுபடி, கல்விக் கடன்கள் தள்ளுபடி, மீனவர்களுக்கு2 லட்சம் வீடுகள், ஆண்டுக்கு 10 லட்சம் வேலை வாய்ப்புகள், அங்கன்வாடி சத்துணவுப் பணியாளர்கள் பணி நிரந்தரம், அரசுப் பணியில் 10 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் அனைவரும் நிரந்தரம் என பலதரப்பினரின் எதிர்பார்ப்பையும் பிரதிபலித்துள்ள திமுகழக தேர்தல் அறிக்கை தேர்தல் களத்தில் மாபெரும் ஆதரவைப் பெற்று மகத்தான வெற்றி பெறும். கடந்த பத்தாண்டுகளாக தமிழக மக்கள் வலியுறுத்தி வரும் ஒட்டுமொத்த கோரிக்கைகளை திமுகழகத் தேர்தல் அறிக்கை உள்வாங்கி, எதிரொலித்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநிலக்குழு வரவேற்கிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More