×

உலகப் போர்கள் மற்றும் வியட்நாம் போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளைக் காட்டிலும் கொரோனா பலி அதிகம்: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேச்சு

வாஷிங்டன்: உலகப் போர்களில் ஏற்பட்ட உயிரிழப்புகளைக் காட்டிலும், கொரோனா தொற்றால் ஏற்பட்ட உயிரிழப்புகள் அதிகம் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். சீனாவின் வூஹான் நகரில் பரவத் துவங்கிய கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியது. அமெரிக்காவில் கடந்த ஆண்டு இதேநாளில் வெடித்துக்கிளம்பிய வைரஸ் தொற்று தற்போது வரை அந்த நாட்டை ஆட்டி படைத்து கொண்டிருக்கிறது. கொரோனா கட்டுக்குள் வர தொடங்கியிருந்தாலும் தினசரி தொற்று 50 ஆயிரத்திற்கும் குறையாமல் இருந்து வருகிறது.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன் நிர்வாகத்தின் தீவிரத்தால் தினசரி கொரோனா தொற்று குறைந்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் அதிபராகப் பொறுப்பேற்று, முதல்முறையாகத் தொலைக்காட்சி வாயிலாக நாட்டு மக்களிடம் அதிபர் ஜோ பைடன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர்; ஓராண்டுக்கு முன்னர் நாம் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோம். அப்போது அந்தத் தொற்றத் தடுத்து நிறுத்தாமல் நாட்கணக்கில், வாரக்கணக்கில், மாதக்கணக்கில் மவுனம் காக்கப்பட்டது. இதனால், தொற்று பரவல், உயிர்ப்பலிகள், அழுத்தம், தனிமை பல சோதனைகளைச் சந்தித்தோம்.

2019ம் ஆண்டு, குடும்பத்துடன் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள், வீடியோக்கள் பலரின் வாழ்க்கையில் நினைவுச் சின்னமாக மாறியுள்ளது. ஒவ்வொருவரின் துயரமும் சற்றே வித்தியாசமாக இருந்தாலும் நாம் அனைவருமே ஏதோ ஒரு வகையில் இழப்பைச் சந்தித்துள்ளோம். மேலும், 2020ம் ஆண்டு உயிர்பலிகள் நிறைந்த ஆண்டாகவும், நம் வாழ்வாதாரத்தைத் தொலைத்த ஆண்டாகவும் அமைந்துள்ளது. அமெரிக்காவில் கொரோனா தொற்றால் இதுவரை 5,27,726 பேர் பலியாகியுள்ளனர். இரண்டு உலகப் போர்கள் மற்றும் வியட்நாம் போரில் ஏற்பட்ட உயிரிழப்புகளைக் காட்டிலும் கொரோனா பலி அதிகம் என கூறினார்.


Tags : Corona ,world wars ,Vietnam War ,US President ,Joe Biden , Corona kills more than world wars and Vietnam War: US President Joe Biden
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...