8 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி அடுத்த ஆட்டத்தில் வலுவுடன் திரும்பி வருவோம்: இந்திய கேப்டன் விராட் கோஹ்லி பேட்டி

அகமதாபாத்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையே 5 போட்டிகள் கொண்ட டி.20 தொடரின் முதல் போட்டி நேற்றிரவு அகமதாபாத்தில் நடந்தது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் செய்த இந்தியா 20 ஓவரில் 7 விக்கெட் இழப்பிற்கு 124 ரன்களே எடுத்தது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 67 (48 பந்து, 8 பவுண்டரி, ஒரு சிக்சர்), ரிஷப் பன்ட் 21, பாண்டியா 19 ரன் எடுத்தனர். தவான் 4, ராகுல் 1, கோஹ்லி டக் அவுட் ஆகினர். இங்கிலாந்து தரப்பில், ஜோப்ரா ஆர்ச்சர் 3 விக்கெட் எடுத்தார். பின்னர் 125 இலக்கை துரத்திய இங்கிலாந்து 15.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 130 ரன் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. ஜோசன் ராய் 49 (32பந்து), பட்லர் 28 ரன்னில் ஆவுட் ஆக, டேவிட் மலன் 24, பேர்ஸ்டோவ் 26 ரன்னில் களத்தில் இருந்தனர். ஆர்ச்சர் ஆட்டநாயகன் விருது பெற்றார். 2வது டி.20 போட்டி நாளை இதே மைதானத்தில் நடக்கிறது.

தோல்விக்கு பின் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி கூறுகையில், இந்த வகையான ஆடுகளத்தில் என்ன செய்வது என்பது பற்றி எங்களுக்கு போதுமான அளவு தெரியாது. தவறான ஷாட்களை ஆடி ஆட்டம் இழந்துவிட்டோம்.  தவறுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும், அடுத்த ஆட்டத்தில் அதிக நோக்கத்துடனும், திட்டத்தின் தெளிவுடனும் திரும்பி வரவேண்டும். பவுன்சரில் எவ்வாறு பேட்டிங் செய்வது என்பதை ஸ்ரேயாஸ் காட்டினார். நாங்கள் சில விஷயங்களை முயற்சித்து பார்த்தோம். 150-160 ரன்கள் எடுத்திருக்க வேண்டும். நாங்கள் முந்தைய டி.20 தொடர்களை வென்றுள்ளோம். உலக கோப்பைக்கு முன் இந்த 5 டி,20 போட்டிகளில் சில விஷயங்களை செய்யவேண்டும். ஆனால் இங்கிலாந்துக்கு எதிராக எதையும்  சாதாரணமாக எடுக்க முடியாது, என்றார்.

இங்கிலாந்து கேப்டன் மோர்கன் கூறுகையில், நாங்கள் வேகப்பந்து வீச்சு தாக்குதல் நடத்தும் நோக்கத்துடன் களம் இறங்கினோம். ஆர்ச்சர் வலிமை என்னவென்றால் அவரால் மற்றவர்களை விட மிக வேகமாக பந்துவீச முடியும். மார்க் வுட்டின்  வேகம் தான் சூப்பர் பலம். நாங்கள் எதிர்பார்த்ததை விட பிட்ச் பந்துவீச்சுக்கு உதவியது. ஜேசன் ராய் சிறப்பாக ரன் எடுத்தார். எங்கள் பேட்டிங் யூனிட்டை போலவே பந்துவீச்சும் அருமையாக உள்ளது, என்றார்.

Related Stories:

>