×

ராசிபுரம் நகராட்சியில் கழிவுகள் கலந்த குடிநீர் விநியோகம்-பொதுமக்கள் புகார்

ராசிபுரம் : ராசிபுரம் நகராட்சி 20 வார்டில் வசிக்கும் மக்களுக்கு, சாக்கடை கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம் செய்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர். ராசிபுரம் நகராட்சியில் வசிக்கும் மக்களுக்கு, இடைப்பாடி - ராசிபுரம் கூட்டு குடிநீர் வினிநியோகம் செய்யப்படுகிறது. இதற்காக ஆட்டையாம்பட்டி அடுத்த கண்டர்குல மாணிக்கம் பகுதியில் நீரூற்று நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆட்டையாம் பட்டி, வெண்ணந்தூர், அத்தனூர் வழியாக ராசிபுரம் நகராட்சிக்கு குழாய் மூலம் தண்ணீர் கொண்டு வரப்பட்டு 4 பிரிவுகளாக பிரித்து, ராசிபுரம் நகராட்சியிலுள்ள 27 வார்டுகளுக்கும் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது.

கூட்டு குடிநீர் திட்ட பிரதான குழாயில் ஆங்காங்கே உடைப்பு ஏற்படுகிறது. மேலும், மின் நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், ராசிபுரம் நகராட்சியில் 20 நாட்களுக்கு ஒரு முறை தான் காவிரி குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. அதுவும் தேவையான அளவுக்கு கிடைப்பதில்லை. இதனால் கேன் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகின்றனர்.

நேற்று முன்தினம், நகராட்சி 20வது வார்டு கோனேரிப்பட்டி குடிநீர் விநியோகம் செய்தனர். இந்த தண்ணீரை பிடித்த போது, கடும் துர்நாற்றத்துடன் சாக்கடை கழிவுநீர் கலந்த நிலையில் இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர். ஏற்கனவே, கடந்த வாரம் 21வது வார்டிலும், இதேபோல் கழிவுநீர் கலந்த குடிநீர் விநியோகம் செய்தனர். இது தொடர்பாக பொதுமக்கள் பல்முறை புகார் கூறியும், நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் அலட்சியம் செய்வதாக குற்றம் சாட்டுகின்றனர்.

Tags : Rasipuram , Rasipuram: People living in 20 wards of Rasipuram municipality were shocked by the distribution of drinking water mixed with sewage.
× RELATED பயிற்சி வகுப்பில் தூங்கி வழிந்த அலுவலர்கள்