குடியரசு தலைவர்கள், முதல்வர்களுக்கு எதிராக வேட்பு மனு தாக்கல் செய்யும் தேர்தல் மன்னன் பத்மராஜன்! : 216வது முறையாக எடப்பாடியில் போட்டி!!

சேலம் : தேர்தல் வந்தால் சுயேட்சையாக போட்டியிடுவதை சிலர் வாடிக்கையாக கொண்டு வந்துள்ள நிலையில், பத்மராஜன் என்பவர் 216வது முறையாக வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். சேலம் மாவட்டம் மேட்டூரை அடுத்த குஞ்சாண்டியூர் பகுதியைச் சேர்ந்தவர் பத்மராஜன் (60). இவருக்கு ஸ்ரீஜா (53) என்ற மனைவியும், ஸ்ரீஜேஷ் (26) என்ற மகனும் உள்ளனர். டயர் ரீ ட்ரேடிங் வேலை செய்து வந்த பத்மராஜனுக்கு உலக அளவில் பிரபலமாகி கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற வேண்டும் என்பதே ஒரே ஆசை.

இவர் முதல்வர் பழனிசாமியை எதிர்த்து எடப்பாடி மற்றும் மேட்டூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். 60 வயதுடைய பத்மராஜன் சட்டமன்றம், நாடாளுமன்றம், உள்ளாட்சி மட்டுமல்லாமல் குடியரசு தலைவர் தேர்தல் உள்ளிட்ட அனைத்திலும் போட்டியிட மனு தாக்கல் செய்வது அவரது வழக்கம். முக்கிய பிரமுகர்கள் போட்டியிடும் இடங்களில் சுயேட்சையாக களம் இறங்கும் பத்மராஜன், இந்த முறை எடப்பாடி தொகுதியில் களம் இறங்கி உள்ளார்.

இதுவரை போட்டியிட்ட அனைத்து தேர்தல்களில் தோல்வியை சந்தித்த போதும் மனம் தளராமல் 216-வது முறையாக தனது வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளார்.செய்தியாளர்களிடம் பேசிய பத்மராஜன், 1988ல் இருந்து வேட்பு மனு தாக்கல் செய்து வருகிறேன்.இதுவரை ராம்நாத் கோவிந்த், அப்துல் கலாம், கே.ஆர். நாராயணன், நரசிம்ம ராவ், ஜெயலலிதா, கருணாநிதி, எடியூரப்பா உள்ளிட்டவர்களை எதிர்த்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். உலக கின்னஸ் புத்தகத்தில் இடம் பெறவே இத்தகைய முயற்சியில் ஈடுபட்டுள்ளேன், என்றார்.  

இதனிடையே கொண்டாரெட்டி எனப்படும் மலைவாழ் மக்கள் மேட்டூர் தொகுதியில் 100 பேர் சுயேட்சையாக போட்டியிட முடிவு செய்துள்ளனர். அந்த சமுதாய நலச்சங்கத்தின் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது.நீதிமன்றம் உத்தரவிட்டும் தங்களுக்கு மலை சாதியினர் என்ற சான்று வழங்காமல் இழுத்தடிப்பதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். கொண்டாரெட்டி இன மக்களின் கோரிக்கையை அரசு நிறைவேற்றவில்லை என்று அவர்கள் சாட்டுகின்றனர்.

Related Stories: