215 வது முறையாக போட்டியிட தேர்தல் மன்னன் பத்மராஜன் மேட்டூரில் பராக்... பராக்...

மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக, தேர்தல் மன்னன் பத்மராஜன் நேற்று 215வது முறையாக வேட்புமனு தாக்கல் செய்துள்ளார். சேலம் மாவட்டம், மேட்டூரை அடுத்துள்ள குஞ்சாண்டியூரில் வசிப்பவர் பத்மராஜன்(62). இவரது மனைவி ஜா. இவர்களுக்கு ஜேஷ் பத்மராஜன் என்ற மகன் உள்ளார். 8ம் வகுப்பு வரை படித்த பத்மராஜன், பழைய லாரி மற்றும் பஸ் டயர்களை புதுப்பிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். முதன்முதலாக 1988ம்ஆண்டு மேட்டூர் சட்டமன்றத் தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது தொலைபேசி இணைப்பு வாங்குவதற்கு, வேட்பாளர்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டு வந்ததால், தொலைபேசி இணைப்பு வாங்குவதற்காகவே வேட்பு மனு தாக்கல் செய்தார். அதன் பிறகு உலக சாதனை புத்தகமான கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காக, தொடர்ந்து வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்.

கூட்டுறவு சங்க தேர்தல் முதல் ஜனாதிபதி தேர்தல் வரை வேட்பு மனு தாக்கல் செய்வதையே வழக்கமாகக் கொண்டுள்ளார். தற்போது, 215வது முறையாக, நேற்று காலை மேட்டூர் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடுவதற்காக, மேட்டூர் சப் கலெக்டர் சரவணனிடம் முதல் நபராக வேட்புமனு தாக்கல் செய்தார். இவர் ஏற்கனவே ஒரே சமயத்தில் 5 நாடாளுமன்ற தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். தேர்தலில் போட்டியிடும் சுயேச்சைகளை கட்டுப்படுத்துவதற்காக, தேர்தல் ஆணையம் டெபாசிட் தொகை பல மடங்கு அதிகரித்தது. ஆனாலும் பத்மராஜன் தொடர்ந்து, தேர்தல் வேட்புமனு தாக்கல் செய்து வருகிறார்.

அடிக்கடி இவர் தேர்தலில் போட்டியிடுவதால், இவருக்கு யாரேனும் பணம் கொடுத்து உதவுகிறார்களா என்பது குறித்து ஆய்வு செய்ய, சில ஆண்டுகளுக்கு முன்பு வருமான வரித்துறை இவரது வீட்டை சோதனையிட்டது. ஆனால், இவரது வீட்டில் இவரை பற்றிய செய்திகள் வந்த பத்திரிகைகள், புத்தகங்கள் மற்றும் பழைய டயர்களை தவிர எதுவும் இல்லாததால், வருமான வரித்துறையினர் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Related Stories:

>