பாஜ வேட்பாளராக அறிவிக்கப்படும் முன் நயினார் நாகேந்திரன் வேட்பு மனுதாக்கல்: மீதமுள்ள 19 தொகுதிக்கும் வேட்பாளர்கள் மனுதாக்கல் செய்வார்களா என சலசலப்பு

நெல்லை: தமிழக சட்டமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள பாஜகவிற்கு 20 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அக்கட்சி இதுவரை வேட்பாளர் பட்டியலை வெளியிடவில்லை. இந்நிலையில் நெல்லை சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் கோட்டாட்சியர் சிவ. கிருஷ்ணமூர்த்தியிடம் நயினார் நாகேந்திரன் நேற்று மனுத்தாக்கல் செய்தார். அவர் பாஜ வேட்பாளர் என தனது வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ள போதிலும், கட்சியின் அங்கீகார கடிதத்தை வேட்புமனுவுடன் இணைக்கவில்லை. பாஜ வேட்பாளர் பட்டியல் இன்னும் அறிவிக்காத நிலையில் நயினார் நாகேந்திரன் வேட்புமனு தாக்கல் செய்தது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

இதுகுறித்து, அவர் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘பாஜ மேலிடத்தின் அனுமதியின் பேரில் நல்லநாள் என்பதால் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளேன்’’ என்று சொன்னார்.

நயினார் நாகேந்தின், நெல்லையில் 2001ல் அதிமுக சார்பில் வெற்றி பெற்று போக்குவரத்து துறை, மின்சாரத் துறை, தொழில் துறை அமைச்சராக பதவி வகித்தார். பின்னர், 2006ல் தோல்வியை தழுவி 2011ல் 3-வது முறையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். அப்போது அமைச்சர் பதவி கிடைக்கவில்லை. அதன்பின், 2016ல் மீண்டும் நெல்லை தொகுதியில் போட்டியிட்டும் திமுக வேட்பாளர் ஏஎல்எஸ் ெலட்சுமணனிடம் தோல்வியை தழுவினார். அதன்பின், அரசியலில் அதிகம் தலைகாட்டாமல் ஒதுங்கி இருந்தார். ஜெயலலிதா மறைவிற்கு பின்னர் டெல்லி சென்று பாஜவில் ஐக்கியமானார் என்பது குறிப்பிடத்தக்கது. வேட்பாளர் பட்டியலை இறுதி செய்வது தொடர்பாக டெல்லியில் பாஜ தலைமை அலுவலகத்தில் தமிழக பா.ஜ பொறுப்பாளர் சி.டி.ரவி, தமிழக தலைவர் எல்.முருகன் ஆகியோர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘தமிழகத்தில் பா.ஜ சார்பில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியல் தொடர்பாக கட்சியின் தேர்தல் கமிட்டி குழுவிடம் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது.

இதையடுத்து, நாளை (இன்று) அல்லது ஞாயிற்றுக்கிழமைக்குள் வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு வெளியிடப்படும். நயினார் நாகேந்திரன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தது என்பது, ஜாதகப்படி இன்று (நேற்று) நல்ல நாளாகும். அதனால்தான், அவர் அவ்வாறு செய்திருக்கிறார்’’ என்று தெரிவித்தனர். நயினார்நாகேந்திரன் தன்னிச்சையாக வேட்பு மனுதாக்கல் செய்ததால் மற்ற 19 தொகுதிகளிலும் போட்டியாளர்கள் தன்னிச்சையாக வேட்பு மனுதாக்கல் செய்துவிடுவார்களா என்ற அச்சம் பாஜகவில் நிலவி வருகிறது.

Related Stories:

>