தொண்டாமுத்தூர் தொகுதியில் அமைச்சர் வேலுமணியை எதிர்த்து களம் இறங்கும் கார்த்திகேய சிவசேனாபதி

கோவை: கோவை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், தொண்டாமுத்தூர் தொகுதி விஐபி தொகுதியாக உள்ளது. இத்தொகுதியில் அமைச்சர் வேலுமணி இரண்டு முறை வெற்றிபெற்று, தற்போது மூன்றாவது முறையாக களம் இறங்குகிறார். கடந்தமுறை இவரை எதிர்த்து போட்டியிட்ட, திமுக கூட்டணியை சேர்ந்த மனிதநேய மக்கள் கட்சி வேட்பாளர் செய்யது என்பவரை 64,041 வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைய செய்தார். இத்தொகுதியில், திமுக நேரடியாக களம் இறங்காததால், வெற்றி வாய்ப்பை வசப்படுத்த முடியவில்லை என்று பேசப்பட்டது.

இந்தநிலையில், இம்முறை இத்தொகுதியில் எஸ்.பி.வேலுமணியை எதிர்த்து திமுக வேட்பாளராக, சுற்றுச்சூழல் துறை செயலாளர் கார்த்திகேய சிவசேனாபதி களம் இறக்கப்பட்டுள்ளார். இவர், திருப்பூர் மாவட்டம் காங்கயத்தில் வசித்து வந்தாலும், பிறந்து வளர்ந்தது, ஆரம்ப கல்வி கற்றது எல்லாமே கோவையாகும். கோவை மீது அதிக ஈடுபாடு கொண்டவர். இயற்கை விவசாயம் மற்றும் கால்நடை வளர்ப்பில் அதிக கவனம் செலுத்தி வருகிறார். உலகளாவிய ஜல்லிக்கட்டு ஒருங்கிணைப்பு கமிட்டி செயலாளராகவும் உள்ளார்.

இவர், இத்தொகுதியில் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு கடும் போட்டியாளராக இருப்பார் என்பது மட்டுமின்றி, தொண்டாமுத்தூர் தொகுதியை திமுக வசமாக மாற்றுவார் எனவும் அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. கடந்த 2019ல் நடந்த மக்களவை தேர்தலில் கோவை எம்பி தொகுதிக்குபட்ட தொண்டாமுத்தூர் சட்டப்பேரவை தொகுதி வாக்குச்சாவடிகளில் திமுக வேட்பாளர் சண்முகசுந்தரம் அதிமுக வேட்பாளர் சி.மகேந்திரனைவிட 21,091 வாக்குகள் அதிகம் பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: