×

ஷ்ரேயாஸ் அரை சதம் வீண்: முதல் டி20ல் இங்கிலாந்து வெற்றி

அகமதாபாத்: இந்திய அணியுடனான முதல் டி20 போட்டியில், இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. மோடி ஸ்டேடியத்தில் நேற்று இரவு நடந்த இப்போட்டியில், டாஸ் வென்ற இங்கிலாந்து கேப்டன் மோர்கன் முதலில் பந்துவீச முடிவு செய்தார். இந்திய அணியில் ரோகித் ஷர்மாவுக்கு ஓய்வளிக்கப்பட்டு, தொடக்க வீரர்களாக ஷிகர் தவான், கே.எல்.ராகுல் களமிறங்கினர். ராகுல் 1 ரன் மட்டுமே எடுத்து ஜோப்ரா ஆர்ச்சர் பந்துவீச்சில் ஸ்டம்புகள் சிதற பெவிலியன் திரும்பினார். அடுத்து வந்த கேப்டன் விராத் கோஹ்லி 5 பந்துகளை சந்தித்து ஒரு ரன் கூட எடுக்காமல், ரஷித் சுழலில் ஜார்டன் வசம் பிடிபட்டார். இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்கு முன்பாகவே ஷிகர் தவான் 12 பந்தில் 4 ரன் எடுத்து மார்க் வுட் பந்துவீச்சில் கிளீன் போல்டானார். இந்தியா 5 ஓவரில் 20 ரன்னுக்கு 3 விக்கெட் இழந்து திணறியது. இந்த நிலையில், ரிஷப் பன்ட் - ஷ்ரேயாஸ் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்கப் போராடினர். பன்ட் 21 ரன் எடுத்து (23 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்) ஸ்டோக்ஸ் வேகத்தில் பேர்ஸ்டோவிடம் கேட்ச் கொடுத்து வெளியெறினார்.

இந்தியா 10 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 48 ரன் எடுத்திருந்தது. ஹர்திக் பாண்டியா பொறுப்புடன் கம்பெனி கொடுக்க, சிறப்பாக விளையாடிய ஷ்ரேயாஸ் அய்யர் அரை சதம் அடித்தார். ஷ்ரேயாஸ் - ஹர்திக் ஜோடி 5வது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்தது. ஹர்திக் 19 ரன் (21 பந்து, 1 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்து ஆர்ச்சர் வேகத்தில் ஜார்டனிடம் பிடிபட, அடுத்த பந்திலேயே ஷர்துல் தாகூர் கோல்டன் டக் அவுட்டாகி ஏமாற்றமளித்தார். ஷ்ரேயாஸ் 67 ரன் (48 பந்து, 8 பவுண்டரி, 1 சிக்சர்) விளாசி ஜார்டன் பந்துவீச்சில் மாலனிடம் பிடிபட்டார். இந்தியா 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 124 ரன் எடுத்தது. வாஷிங்டன் சுந்தர் 3 ரன், அக்சர் படேல் 7 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து பந்துவீச்சில் ஆர்ச்சர் 3, ரஷித், வுட், ஜார்டன், ஸ்டோக்ஸ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர்.

அடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணிக்கு, ஜேசன் ராய் - பட்லர் ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8 ஓவரில் 72 ரன் சேர்த்து நல்ல தொடக்கத்தை கொடுத்தது. பட்லர் 28 ரன் (24 பந்து, 2 பவுண்டரி, 1 சிக்சர்), ராய் 49 ரன் (32 பந்து, 4 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி பெவிலியன் திரும்பினர். இங்கிலாந்து 15.3 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 130 ரன் எடுத்து வென்றது. மாலன் 24 ரன் (20 பந்து), 2 பவுண்டரி, 1 சிக்சர்), பேர்ஸ்டோ 26 ரன்னுடன் (17 பந்து, 1 பவுண்டரி, 2 சிக்சர்) ஆட்டமிழக்காமல் இருந்தனர். இங்கிலாந்து 1-0 என முன்னிலை வகிக்க, 2வது போட்டி அகமதாபாத்தில் நாளை நடக்கிறது.


Tags : Shreyas ,England , In the first T20 match against India, England
× RELATED ஆல் இங்கிலாந்து பேட்மின்டன் தங்கம் வென்றார் கரோலினா மரின்