×

வடசேரி எஸ்எம்ஆர்வி பஸ்நிறுத்தம் பகுதியில் கழிவுநீர் ஓடையில் கவிழும் வாகனங்கள்

நாகர்கோவில்: நாகர்கோவில் மாநகராட்சி ஆணையராக ஆஷா அஜித் பொறுப்பேற்றவுடன் முதலில் கழிவு நீரோடைகளில் உள்ள ஆக்ரமிப்புகளை அகற்றி கழிவுநீர்கள் சாலையில் வராத வகையில் நடவடிக்கை மேற்கொண்டார். அவரது நடவடிக்கைக்கு பொது மக்கள் தரப்பில் வரவேற்பு இருந்தது. ஆனால் கழிவுநீரோடைகளில் உள்ள ஆக்கிரமிப்பு அகற்றிவிட்டு அப்படியே விட்டுச்சென்றதால் விபத்துகள் ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக வடசேரி எஸ்எம்ஆர்வி பள்ளி அருகே ஓடும் கழிவுநீர் ஓடையில் ஆக்ரமிப்பு அகற்றப்பட்டது. இதனால் ஓடை அகலமானதுடன், ஓடையின் கரைகளும் உடைந்தது. இதனால் சாலைஓரமாக வேகமாக வரும் பைக்குகள் கழிவுநீர் ஓடையில் விழும் சம்பவங்கள் அடிக்கடி நடந்து வருகிறது. நேற்று வடசேரியில் இருந்து புத்தேரி நோக்கி ஒரு சொகுசு கார் சென்றுகொண்டு இருந்தது.

எஸ்எம்ஆர்வி பஸ் நிறுத்தம் பகுதியில் வரும்போது எதிரே வந்த வாகனத்திற்கு வழிவிடும் வகையில் சொகுசு காரை டிரைவர் சாலையோரம் ஒதுக்கியுள்ளார். எதிர்பாராத விதமாக காரின் முன்சக்கரம் சாலையைவிட்டு கழிவுநீர் ஓடையில் இறங்கியது. சுதாரித்துகொண்ட டிரைவர் காரை நிறுத்தினார். இதனால் கார் சாலைக்கும், கழிவுநீர் ஓடைக்கும் இடையே அந்தரத்தில் தொங்கிய நிலையில் நின்றது. காரில் இருந்தவர்கள் இறங்கினர். அதன்பிறகு மீட்பு வாகனம் கொண்டுவரப்பட்டு அந்த கார் மீட்கப்பட்டது. இதேபோல் தொடர்ந்து விபத்துகள் நடந்து வருவதால், கழிவுநீர் ஓடை கரையில் தடுப்புசுவர் கட்டவேண்டும் என்று அந்த பகுதி மக்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Tags : Vadacherry , Vehicles overturning in a sewer stream at the Vadacherry SMRV bus stand
× RELATED தஞ்சை மாவட்டம் வடசேரியில் அரசுப்...