×

குலதெய்வ கோயிலுக்கு படையெடுத்த மக்களால் உசிலம்பட்டியில் கடும் போக்குவரத்து நெரிசல்-மணிக்கணக்கில் அணி வகுத்த வாகனங்களால் பயணிகள் அவதி

உசிலம்பட்டி : மதுரை மாவட்டத்தில் உள்ள உசிலம்பட்டி நான்கு சாலைகள் சந்திக்கும் முக்கிய சந்திப்பாக உள்ளது. தேனி மாவட்டத்தில் இருந்து மதுரைக்கு செல்லும் வாகனங்களும், வத்தலக்குண்டுவிலிருந்து வரும் வாகனங்களும், பேரையூர் பகுதியிலிருந்து வரும் வாகனங்களும், மதுரையிலிருந்து வரும் வாகனங்களும் உசிலம்பட்டி வழியாக சென்று வருகின்றன. இதனால், முக்கிய திருவிழா காலங்கள், முகூர்த்த காலங்களில் வாகனங்கள்  வரும்போது, போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, மணிக்கணக்கில் போக்குவரத்து  ஸ்தம்பிக்கிறது. இதனால், நகரில் புறவழிச்சாலை அமைக்கக்கோரி கடந்த 10 ஆண்டாக பல்வேறு  தரப்பினர் கோரிக்கை விடுத்தும் இதுவரை நடவடிக்கை இல்லை.

இந்நிலையில், நேற்று மகாசிவராத்திரியை முன்னிட்டு உசிலம்பட்டி பகுதியில் உள்ள பாப்பாபட்டி, கருமாத்தூர், நாட்டாமங்கலம், புத்தூர், நல்லுத்தேவன்பட்டி, அல்லிக்குண்டம், பூசலப்புரம், மதிப்பனூர், வகுரணி, தும்மக்குண்டு, வி.கள்ளபட்டி, எழுமலை, எம்.கல்லுப்பட்டி, டி.கிருஷ்ணாபுரம், திடீயன், வாலாந்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள குலதெய்வ கோயில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில், கலந்து கொள்வதற்காக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து சொந்த வாகனங்களில் பொதுமக்கள் வந்தனர்.

இதனால், உசிலம்பட்டியில் உள்ள மதுரை, தேனி, பேரையூர், வத்தலக்குண்டு ஆகிய சாலைகளில் கடுமையான போக்குவரத்து ெநரிசல் ஏற்பட்டது. நான்கு சாலைகளிலும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் மணிக்கணக்கில் நின்றன. அரசு, தனியார் பஸ்களில் வந்த பயணிகளும் அவதிப்பட்டனர். போக்குவரத்து நெரிசல் காலை 10 மணி முதல் மாலை வரை நீடித்தது. உசிலம்பட்டி டிஎஸ்பி ராஜன் தலைமையிலான போலீசார் போக்குவரத்தை சீர்படுத்தினர்.  அதிமுகவும் தேர்தல் அறிக்கையில் புறவழிச்சாலை அமைப்பதாக வாக்குறுதி கொடுத்தது. ஆனால், நிறைவேற்றவில்லை. எனவே, போக்குவரத்து நெரிசலை குறைக்க, நகரில் புறவழிச்சாலை அமைக்க வேண்டும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Usilampatti ,Kuladeyva , Usilampatti: Usilampatti in Madurai district is the main junction of four roads. From Theni district
× RELATED கடைகளை கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு...