×

திருமலைசமுத்திரம் பகுதியில் காயும் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறக்க வேண்டும்-விவசாயிகள் சங்கம் வலியுறுத்தல்

*குரலற்றவர்களின் குரல்

தஞ்சை : திருமலைசமுத்திரம் பகுதியில் தண்ணீர் இன்றி காய்ந்து வரும் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் திறந்து விட வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தஞ்சாவூர் மாவட்டம், திருமலைசமுத்திரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் சுமார் 1000 ஏக்கருக்கு மேல் நெல் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. பயிரிடப்பட்டு 50 முதல் 70 நாட்களை கடந்த நிலையில், 20 முதல் 30 நாட்களுக்கு தண்ணீர் கிடைத்தால், பயிர்களை காப்பாற்ற முடியும் என விவசாயிகள் நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கண்ணன் கூறுகையில், “காய்ந்து வரும் பயிர்களை காப்பாற்ற தண்ணீர் வேண்டும் என வலியுறுத்தி, கடந்த சில நாட்களுக்கு முன் விவசாயிகள் திரண்டு போராட்டம் நடத்தினோம். இதில், உடனடியாக தண்ணீர் திறப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். ஆனாலும் கட்டளை மேட்டு வாய்க்காலில் தண்ணீர் திறக்கவில்லை.

பயிர்கள் கடும் வெயில் காரணமாக மடிய துவங்கி விட்டது. அரசை நம்பி காத்திருப்பு தொடர்கிறது. ஆனால் அரசு நிர்வாகம் பொதுத்தேர்தல் அவசரத்தை காரணம் காட்டி விவசாயிகளை மறந்து விட்டது. எனவே, உடனடியாக மேட்டூர் அணையில் இருந்து ஆயிரம் கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்றார்.

திருமலைசமுத்திரம் விவசாயி நாகராஜன், “தற்போதைய உடனடி தேவை கருகும் பயிரையும், விவசாயிகள் உயிரையும் காப்பது தான். விவசாயிகளின் சூழ்நிலையோ தைரியம் இழந்து, கடன் தொல்லைகளால் ஏதேனும் நடந்து விடுமோ என்ற அச்சமாக உள்ளது. எங்களுக்கு மாவட்ட நிர்வாகம் உதவிக்கரம் நீட்ட வேண்டும்” என்றார். தஞ்சை மாவட்ட கலெக்டர், துரிதமாக உதவும் முயற்சியும் செய்து வருகிறார்.

ஆனாலும் இன்னும் எதுவும் நடைபெறாதது ஏமாற்றத்தின் அளவும், நம்பிக்கையின்மையின் அளவும் கூடிக்கொண்டே இருக்கிறது. மாவட்ட கலெக்டரின் முயற்சிகளுக்கு திருச்சி ஆற்றுப் பாசன கோட்ட அதிகாரிகளும், மின்சார வாரியமும் ஒத்துழைப்பு கொடுத்தால் சற்றே தீர்வு கிடைக்கலாம். தேர்தல் நடத்தை விதிமுறைகளை, நடைமுறைகளை காரணம் காட்டி விவசாயமும், விவசாயிகளும் அழிவதை ஏற்க முடியவில்லை என்பது இப்பகுதி விவசாயிகள் கருத்தாக உள்ளது.

Tags : Atlantic Ocean , Tanjore: Tamil Nadu farmers say water should be opened to save crops that are drying up without water in Thirumalaisamudram area.
× RELATED 5 கோடி ரூபாய்க்கு டைட்டானிக் மரக்கதவு ஏலம்