×

மாவட்டத்தில் கொட்டி தீர்த்த கனமழை வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட கார், ஜீப்-கோத்தகிரியில் 120 மி.மீ. மழை பதிவு

ஊட்டி : நீலகிரியில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் இடியுடன் திடீர் கனமழை பெய்ததால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டு ஜூன் மாதம் துவங்கிய தென்மேற்கு பருவமழை இரு மாதம் கொட்டி தீர்த்தது. தொடர்ந்து நவம்பர் மாதம் முதல் வடகிழக்கு பருவமழை துவங்கி ஜனவரி மாதம் முதல் வாரம் மழை பெய்தது. இதனால், இம்முறை டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களில் பனியின் தாக்கம் சற்று குறைந்து காணப்பட்டது.

அதேசமயம், ஜனவரி இரண்டாவது வாரத்திற்கு மேல் உறை பனியின் தாக்கம் மிக அதிகமாக இருந்தது. இதனால், மாவட்டத்தில் பல இடங்களில் தேயிலை செடிகள் கருகின. மலை காய்கறி விவசாயமும் பாதித்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு மாவட்டத்தில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பெய்தது.

குறிப்பாக, குன்னூர், மஞ்சூர் மற்றும் கோத்தகிரி பகுதிகளில் இரவு முழுக்க மழை கொட்டி தீர்த்தது. பெரும்பாலான இடங்களில் ஐஸ் கட்டி மழை பெய்தது. கோத்தகிரி பகுதியில் கன மழை பெய்ததால், பெரும்பாலான இடங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது.கீழ்கோத்தகிரி அருகேயுள்ள குயின் சோலை பகுதியில் ஆற்றின் கரையோரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரு வாகனங்கள் தண்ணீர் அடித்துச் செல்லப்பட்டன. இருப்பினும், உயிர்சேதம் ஏற்படவில்லை. இரு மாதங்களுக்கு மேலாக உறைபனி தாக்கத்தால் பாதிக்கப்பட்டிருந்த தேயிலை செடிகள் மற்றும் மழை காய்கறிகளுக்கு இந்த மழை வரப்பிரசாதமாக அமைந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

வானம் தொடர்ந்து மேகமூட்டத்துடன் காணப்படுவதால் மேலும் சில நாட்கள் மழை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. நீலகிரி மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழையின் அளவு மி.மீட்டரில்: ஊட்டி 3.4, குந்தா 41, எமரால்டு 7, அவலாஞ்சி 9, கெத்தை 42, கிண்ணக்கொரை 26, குன்னூர் 55, கோத்தகிரி 120. கோடநாடு 27, பர்லியார் 50.

மஞ்சூரில் இடி, மின்னலுடன்:  நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றி உள்ள குந்தா பகுதியில் கடந்த நவம்பர் மாதம் பனி விழத்துவங்கி 5 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகிறது. டிசம்பர் மற்றும் ஜனவரியில் உறைபனியின் தாக்கமும் அதிகரித்தது. இதனால், கடும் வறட்சி ஏற்பட்டுள்ளது.
வறட்சியின் தாக்கத்தால் குந்தா பகுதியை சுற்றிலும் நூற்றுக்கணக்கான ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த தேயிலை செடிகள் கருகிபோய் பசுந்தேயிலை வரத்து குறைந்துள்ளது. இப்பகுதியில் உள்ள பெரும்பாலான கூட்டுறவு தொழிற்சாலைகளிலும் கடந்த சில நாட்களாக தினமும் வெறும் 7 ஆயிரம் கிலோ முதல் 8 ஆயிரம் கிலோ வரை மட்டுமே பசுந்தேயிலை வரத்து உள்ளதால் தேயிலை தூள் உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது.

பசுந்தேயிலை வரத்து குறைந்துள்ளதை தொடர்ந்து இயந்திரங்கள் பராமரிப்பு, மின்கட்டணம், எரிபொருள் உள்ளிட்ட பல்வேறு செலவினங்களை கருத்தில் கொண்டு தேயிலை உற்பத்தி இரண்டு மற்றும் மூன்று நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், காலநிலையில் ஏற்பட்ட மாற்றத்தால் நேற்று முன்தினம் இரவு திடீரென மழை பெய்ய துவங்கியது. தொடர்ந்து இடி, மின்னலுடன் 3 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்தது. இதனால், சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

நேற்று காலை நிலவரப்படி குந்தாவில் 41 மி.மீ, கெத்தையில் 42 மி.மீ, கிண்ணக்கொரையில் 26 மி.மீ, சாம்ராஜ் பகுதியில் 32 மி.மீ மழை பதிவாகியுள்ளது. நீண்ட இடைவெளிக்கு பின் பெய்த பலத்த மழையால் வறண்டு கிடந்த விவசாய நிலங்களில் ஈரப்பதம் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

குன்னூர்: குன்னூர், கோத்தகிரி சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் திடீரென  கனமழை பெய்தது. இதனால், கோத்தகிரி பகுதியில் உள்ள நீரோடைகளில்  வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நள்ளிரவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் கோத்தகிரி அருகே உள்ள குயின்சோலை பகுதியில் ஆற்று ஓடையின் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒரு கார் மற்றும் பைக் அடித்து செல்லப்பட்டது. கரிக்கையூர் பகுதியில் பிக்கப் ஜீப் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. வாகனங்களை பொதுமக்கள் இணைந்து மீட்டனர். இருப்பினும், வாகனங்கள் கடும் சேதமடைந்தன.

Tags : Kotagiri , Ooty: Farmers in the Nilgiris were happy with the sudden heavy rains that lashed the area last night.
× RELATED கோத்தகிரி சுற்றுவட்டாரங்களில் இதமான காலநிலை நிலவுகிறது